பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 வல்லிக்கண்ணன் கதைகள்

உன்னை லவ் பண்ணினவர் இப்பவும் உன்னைப் பார்த்துக் கொண்டே தான் போகிறாரா?' என்பாள்.

கலா முகத்தைச் சுளித்துக் கோணல் படுத்தி, 'தெருவோடு போற சனி எல்லாம் பார்க்கவில்லை என்று யார் வருத்தப்படுறாங்க? பீடை! தரித்திரக் குரங்கு - அதும் அதன் மூஞ்சியும்!' என்று சிடு சிடுப்பாள். அக்காளின் சிரிப்பு நீரோடை எனக் களகளக்கும். சின்ன அக்காள் சாவித்திரி இப்பொழுதும் வாய்திறந்து எதுவும் சொல்வதில்லைதான்.

('அமுத சுரபி, 1962)


உடைந்த கண்ணாடி


'காந்தி!

குளுகுளு என்று பசுமை கவிந்திருந்த மாந்தோப்பில், மாமரங்களுக்கிடையே வளைந்து நெளிந்து அழுத்தமாகப் பதிந்து கிடந்த ஒற்றையடித் தடத்தில் அவசரமற்று நடந்து கொண்டிருந்த யுவதியைக் குலுக்கியது அந்த அழைப்பு.

தனது நினைப்பும் தானுமாய் மெது நடை நடந்த அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். முன்னாலும் பின்னாலும் சுற்றுப்புறத்திலும் அவளது மருண்ட பார்வை புரண்டு சுழன்றது.

விடிவின் வெளிச்சம் இருள் அணையை உடைத்துக் கொண்டு வேகமாகப் பாய்ந்து பரவும் வேளை. புத்துணர்வும் புதிய எழிலும் இளமையும் குளிர்ச்சியும் எங்கும் வியாபித்து நின்ற உதய காலம். இரவு போய்விட்ட மகிழ்ச்சியினாலோ, ஒளி எங்கும் பரவி வருவதை உணர்ந்த அதிசயத்தினாலோ, பறவைக் கூட்டங்கள் ஒரேயடியாகக் கூச்சலிட்டு ஆரவாரித்தன. எங்கோ மறைந்திருந்த குயில் ஓங்கிக் கூவி, தனது உவகையை அறிவித்துக் கொண்டிருந்தது. -

காந்திமதி வழக்கம்போல், விடிந்தும் விடியா வெள்ளிய இளம் பொழுதில் ஆற்றை நோக்கி வந்தாள். இனிமேல் தான் ஒருவர் இருவராக, பெண்கள் வருவார்கள். மழையோ, பனியோ, குளிரோ, கோடையோ - கவலையேயில்லாமல் தினசரி தவறாது அதிகாலையில் ஆற்றில் நீராடுவதை வாழ்க்கை நியதியாக வகுத்துக் கொண்டிருந்த இரண்டு மூன்று ஆண்கள், பெரியவர்கள், இயந்திர ரீதியில் தங்கள் தொழிலை முடித்துக்