பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடைந்த கண்ணாடி 147

கொண்டு திரும்பி விட்டார்கள். காலை ஏழு மணிக்குமேல்தான் ஆற்றங்கரையில் ஜனநடமாட்டம் அதிகரிக்கும்.

அந்த ஊர்க்காரர்கள் ஆற்றில் நீராடுவதற்கு அவசரப்பட வேண்டிய அவசியமே இல்லைதான். ஆற்றங்கரையை ஒட்டி அமையும் பாக்கியம் பெற்ற ஒரு சில ஊர்களில் அதுவும் ஒன்று. அழகான இடமும் கூட. நதியை ஒட்டிய கரை புல் தரிசாக அகன்று செழிப்பான மாந்தோப்புக்களாக மாறி, ஊரின் கடைசித் தெருவோடு கலக்கும். அங்கேயே கடைத்தெருவும், வீட்டு வரிசைகளும் ஆரம்பமாகி விடுகின்றன. அந்த ஊர்க்காரர்களுக்கு ஆற்றங்கரையே பொழுதுபோக்கும் இடமாகும். ஊர் இளைஞர்களுக்கும் சிறு பையன்களுக்கும் ஆற்றின் மணல் பரப்பே விளையாட்டு மைதானம்; இதெல்லாம் சாயங்கால நேரத்தில்.

வைகறையின் போது ஆற்றங்கரை அமைதியின் கொலு மண்டபமாகத்தான் திகழும். அந்த நேரம்தான் காந்திமதி போன்ற யுவதிகளுக்கு அமைதியாய் நீராடிவிட்டு, குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, வேகமாய் வீடு திரும்புவதற்கு ஏற்ற நேரம். அவள் தனியாகவோ, அல்லது அடுத்த விட்டுப் பெண்ணுடனோ வந்து போவாள்.

இன்று தனியாக வந்தவள், கூப்பிடும் குரல் கேட்டு, தோழி லஷ்மிதான் வருகிறாளோ என்று தயங்கினாள். ஒரு கனம்தான். அந்த அழைப்பு தன் தோழியின் குரலில் தொனிக்கவில்லை; எனினும் நினைவுப்புலனில் ரீங்காரம் செய்த ஒரு பழகிய குரலாகவும் ஒலித்ததே என்ற திகைப்புடன், அவள் முன்னே அடி பெயர்த்து நகர்ந்தாள்.

'என்ன காந்தி, பயந்துட்டியா, ஹெஹஹ!' தெறித்த சிரிப்பும், மகிழ்வால் முழுதலர்ந்த முகமுமாய் வந்து நின்ற இளைஞனைப் பார்த்ததும், அவள் முகம் அந்நேரத்திய இயற்கைபோல் எழில் பெற்றது. கீழ்த்திசை வானத்தில் பூத்துக் கிடந்த இளஞ்சிவப்பு அவள் கன்னங்களிலும் படர்ந்தது. அடிவான விளிம்பிலே ரேகையிட்ட சுடரொளி அவளது விழிகளிலும் பிரகாசித்தது. 'அத்தான்!' என்ற ஒற்றைச் சொல்தான் உதிர்ந்தது அவளிடமிருந்து. உணர்ச்சிக் குழப்பம் அவளை ஊமையாக்கி விட்டது.

‘'நீ இந்நேரத்துக்கு இங்கு வருவாய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் ஐந்து மணிக்கே எழுந்து இங்கே வந்தேன்". சந்திரனின் உள்ளத்தில் ஆனந்தம் ஊற்றெடுத்துக் குபுகுபுத்தது. அது அவன் பேச்சிலே தெறித்தது; முகத்தின் மலர்ச்சியில் புரண்டது; கண் வீச்சில் மின்னி மிதந்தது.