பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடைந்த கண்ணாடி 155

எல்லாருக்கும் நல்லதை எண்ணித்தானே காரியம் செய்வீங்க? சந்திரனுக்குக் காந்தி என்றாலே உசிரு. காந்திக்கும் சின்ன அத்தான் மேலே ஆசைதான்" என்று அவள் சொன்னாள். பெரியவனுக்குக் காந்திமதியிடம் வெறுப்புமில்லை, விருப்புமில்லை என்று அவள் அறிந்திருந்தாள்.

காந்திமதி அவ்வப்போது அத்தை வீட்டில் தங்கிப் போக வருவதுண்டு. அவள் தோற்றமும் அழுக்குப் பாவாடையும், பழந்துணியைக் கிழித்துத் தலைப் பின்னலை முடிந்து வைத்திருப்பதும் சேதுராமனுக்குப் பிடிக்காது. "மூஞ்சியைப் பாரு! பனங்காய் மாதிரி. சுத்தப்பட்டிக்காடு!” என்று குத்தலாகச் சொல்லுவான். அவளுடைய வாயரட்டையும் அவனுக்கு மகிழ்வு தந்ததில்லை. ஆனால் சந்திரனோ வேண்டுமென்றே அவள் வாயைக் கிளறி, வம்புக்கிழுத்து வசவு வாங்கிக் கட்டிக் கொள்வதில் உற்சாகம் காட்டுவான். 'காந்திக்கும் சந்திரனுக்கும் தான் ரொம்பவும் பொருத்தம். அம்மான் பிள்ளை அத்தை பிள்ளை என்பது சரியாகத்தான் இருக்கிறது. இரண்டுபேரும் எப்பப் பார்த்தாலும் இசலிக் கொண்டே இருக்கிறார்களே! அப்படிக் கலகலப்பாக இருப்பதும் நல்லாத்தானிருக்கு' என்று பெரியவர்கள் பெருமைப்படுவது வழக்கம்.

இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைத்து விடலாந்தான். ஆனால், பெரியவன் இருக்கிறபோது சின்னவனுக்கு எப்படி முதலில் கல்யாணம் பண்ண முடியும்?

மாமா பெண் தேடிப் பெரியவனுக்குக் கல்யாணத்தை முடித்துவிடலாமென முயன்ற போது, சேதுராமன்தான் குறுக்கிட்டான். "எனக்குக் கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? உத்தியோகம் கிடைக்கட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு யார் கஷ்டப்படுவது?" என்று உறுதியாகக் கூறினான் அவன். அவனுடைய மனசை யாரும் மாற்ற முடியவில்லை.

"வருசமாக ஆக வயசும் ஆகிக் கொண்டே போகிறதே. நம்ம காந்தியை எவ்வளவு காலம் வீட்டோடு கன்னியாகவே வைத்துக் கொண்டிருக்க முடியும்?" என்று காந்திமதியின் அம்மா முணுமுணுக்கத் தொடங்கினாள்.

'"இந்தத் தடவை பார்வதி வரட்டும். ரெண்டுலே ஒண்ணு நிச்சயமாக முடிவு பண்ணிப் போடுவோம். சேதுராமனும் இம்முறை இங்கே வருவதாகச் சொல்லியிருக்கிறான். இரண்டு பேர் கல்யாணத்தையும் சேர்த்தே முடித்துவிடலாம்” என்றார் சிதம்பரம் பிள்ளை.