பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 வல்லிக்கண்ணன் கதைகள்

‘'என்ன மாமா, செளக்கிய மெல்லாம் எப்படி?” என விசாரித்தபடி வந்து சேர்ந்தான் சந்திரன். "நான் நேற்று இரவே வந்து விட்டேன். அம்மாவும் அண்ணனும் இன்று வருவார்கள்" என்று தெரிவித்தான்.

"கல்யாண விஷயமாகச் சேது என்னவாவது சொன்னானா? அவன் எண்ணம்தான் என்ன? உனக்குத் தெரிந்திருக்குமே?” என்று மாமா அவனிடம் விசாரித்தார்.

"அண்ணாச்சி இதுபோன்ற விஷயங்களை என்னிடம் சொல்வது கிடையாது. அவர்கள் அபிப்பிராயம் என்னவோ, எனக்கென்ன தெரியும்!” என்று கூறிச் சிரித்தான் சந்திரன், காந்திக்காக நான் ஒரு பிரஸன்ட் வாங்கி வந்திருக்கிறேன். அருமையான கண்ணாடி. கையகலம் கண்ணாடியை வைத்துக் கொண்டு - அதிலும் ரசம் போய் மங்கிவிட்டதே - அவள் சிரமப்படுவதை நான் ஒரு சமயம் பார்த்திருக்கிறேன். அதனாலே நல்ல கண்ணாடியாக ஒன்று வாங்கி வந்தேன்? என்று சொல்லி, முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவரிடம் கொடுத்தான்.

காந்திமதியின் மகிழ்ச்சியை அவளது வளைகளின் கலகலப்பு எடுத்தியம்பியது.

"இன்றைக்கு மாப்பிள்ளைக்கு மத்தியானச் சாப்பாடு நம்ம வீட்டிலே’ என்று சொன்னார் சிதம்பரம் பிள்ளை.

“சரி. அப்புறம் வாறேன்!” என்று கூறி எழுந்த சந்திரனின் கண்கள் வீட்டின் உட்பக்கம் துழாவின. அவை ஏமாறவில்லை.

காந்திமதி அவன் பார்வையில் படும் இடத்தில் நின்றாள், ஒரு கையில் கண்ணாடியை வைத்துக்கொண்டு. அதை அவள் தன் முகத்துக்கு நேராக எதிரே பிடித்திருக்கவில்லை. ஒரு கன்னத்தின் பக்கம் வைத்திருந்தாள். அதில் அவள் முகத்தின் ஒரு கோணம் நிழலிட்டது. குறுகுறுக்கும் விழி ஒன்றும், குறும்புச் சிரிப்பு தீட்டும் இதழ்களின் ஒரு பகுதியும் மின்னின. அவள் கண்கள் சிரித்தன; இதழ்கள் சிரித்தன; முகம் முழுதுமே சிரிப்பால் மலர்ந்து எழிலுற்று விளங்கியது.

கண்ணாடியின் வழவழப்பு சிறந்ததா? அதனுடன் போட்டியிடும் கன்னத்தின் மினுமினுப்பு சிறந்ததா? இப்படிப் பரீட்சை நடத்துகிறாளோ என்னவோ!' என்று சிரித்தது அவன் உள்ளம். அதனால் அவன் முகமும் சிரித்தது. மகிழ்வு குலுங்கும் உள்ளமும் உருவமும் பெற்றவனாய் வெளியே போனான் சந்திரன். -

காலம் மனித உள்ளங்களோடும் உணர்வுகளோடும் விளையாடத் தவிக்கிறது; விபரீத வேடிக்கைகளை விதைத்து மனித