பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடைந்த கண்ணாடி 157

வாழ்க்கையையே தாறுமாறாக்கி விடுகிறது என்பதைச் சந்திரன் அந்த வேளையில் அறிந்திருக்கவில்லை தான். ஆனால், சீக்கிரம் அவன் உணர்ந்து கொள்வதற்குக் காலமே துணைபுரிந்தது.

சந்தோஷமாக வெளியே சென்ற சந்திரன் மகிழ்வே உருவானவன் போன்று அங்கே திரும்பி வருவதற்குள் மூன்று மணி நேரம் தான் ஒடியிருந்தது. ஆயினும் அது அவனுக்கு அதிர்ச்சியைச் சிருஷ்டித்து விட்டிருந்தது.

சந்திரன் திரும்ப வந்தபோது, அவ்வீட்டிலே ஏதோ சோக நிழல் கவிந்துகிடப்பதுபோல் உணர்ந்தான். சிதம்பரம் பிள்ளையின் முகத்தில் வாட்டம் மட்டும் படிந்திருக்க வில்லை. கவலையும் சிந்தனையும் முகாமிட்டிருப்பதையும் அவன் காண முடிந்தது. உள்ளே அடி எடுத்து வைத்த 'சின்ன மாப்பிள்ளைப் பிள்ளை'யைக் கண்டதும் வழக்கமாக ஏற்படும் மலர்ச்சி அவர் முகத்தில் படரவில்லை. மாறாக, ஒரு வேதனை படர்ந்ததாகத் தோன்றியது. அவர் கண்கள் அவன் முகத்தில் பதிந்தன. எனினும் அவனைப் பாராத பார்வையே அவ்விழிகளில் படலம்போல் படிந்து நின்றதாகத் தெரிந்தது.

"என்ன மாமா?" என்றான் அவன். பெருமூச்செறிந்தார் பிள்ளை. - -

அவன் அக்கறையோடு கேட்கலானான். "ஏன் மாமா ஒருமாதிரி இருக்கிறீர்கள்? திடீரென்று உடம்புக்கு ஏதாவது..."

சிதம்பரம் பிள்ளை பரிவோடு, பாசத்தோடு, வேதனையோடு அவனை உற்று நோக்கினார். "சந்திரா!" என்றார், எதை முதலில் ஆரம்பிப்பது, சொல்ல வேண்டியதை எப்படிச் சொல்லுவது என்று புரியாதவராய், மனக் குழப்பத்தோடும் உணர்ச்சிகளின் குழப்பதலோடும் அவர் அவனைப் பார்த்தார்.

“என்ன மாமா?' என்று பதறினான் அவன். '

நீ விட்டிலேயிருந்து தானே வாறே?" என்று அத்தை குரல் கொடுத்தபடியே முன் அறைக்கு வந்தாள்.

"இல்லையே. நான் வீட்டுக்கே போகவில்லை. எங்கெங்கோ சுற்றிவிட்டு வருகிறேன்" என்று திகைப்போடு பேசினான் சந்திரன்.

"உன் அண்ணன் இங்கே வந்திருந்தான்" என்று இழுத்தாள் அத்தை. -

"ஒ" என்றான் அவன்.

"சந்திரா, உட்காரப்பா!" என்றார் மாமா. "உன்னிடம் இதை எப்படிச் சொல்வது என்றே புரியல்லே. ஆனாலும் சொல்லித்