பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 வல்லிக்கண்ணன் கதைகள்

உட்காருவதும் அவர் பார்வையில் பட்டது. இரண்டு பேரும் சந்தோஷமாகக் காட்சி அளித்தார்கள். இருவரும் சேர்ந்து பேசி, திட்டமிட்டுத் தான் கிளம்பியிருக்கிறார்கள் என்பது விளங்கி விட்டது.

'அப்புறம் என்ன! நமக்கு ஒரு வேலைக்காரி வேண்டும். நல்ல ஆளா உங்களுக்குத் தெரிந்த நபர் யாராவது இருந்தால் சொல்லுங்க' என்றார் சிவராமன்.

(தீபம், 1978)


பொன்கொன்றை பூக்கும்போது...


தோ, என் எதிரே, அந்த மரம் மீண்டும் பூத்துக் குலுங்குகிறது. முகமெல்லாம் சிரிப்பேயாகி, சிரிப்பினால் முழு உருவமும் தனியொரு எழிலேயாகி நிற்கும் அழகுப் பெண் போல, அது முழுவதும் சிரிக்கும் மலர்களாகவே விளங்குகிறது. சரம் சரமாகத் தொங்கும் மஞ்சள் பூக்கள். பெயருக்குக்கூட மரத்தில் ஒரு இலையைக் கானோம். அதற்கு ஏன் இத்தனை உள்ளக் கிளர்ச்சி? ஏதுக்கு இத்தனை சிலிர்ப்பு? மங்கையின் உள்ளத்தில் கிளுகிளுக்கும் பருவகாலக் கனவுகள் அவள் முகத்திலும் அங்கங்களிலும் - அவள் மேனி முழுவதிலுமே பூத்துப் பொங்கி வனப்பாய்த் திகழ்வதுபோல், அதற்கும் ஏதேனும் கனவுகள், கிளர்வுகள் உள்ளுற இருந்து, புறத்தில் பொன்னிற மலர்களாய் மொய்த்துக் கிடக்கின்றனவோ?

நான் இந்த ஊருக்கு வந்த புதிதில், முதன் முதலாக இவ்வித எழிற்கோலத்தில் அம்மரத்தைப் பார்த்தபோது, அது என்ன மரம் என்று அறிந்திருந்தேனில்லை. கண்ணைக் கருத்தைக் கவரும் மோகனத் தோற்றமாய் நின்ற அதை அறிமுகம் செய்து கொள்ளும் அவாவோடு ஒரு பெரியவரிடம் விசாரித்தபோது, 'பொன் கொன்னை' என்றார் அவர். "சரக்கொன்றை என்றும் சொல்லுவார்கள்.”

"கொங்கைகளும் கொன்றைகளும் பூச்சொரியும் காலம்" - என்று நந்திக் கலம்பகத்தில் வருவது, இந்த இனத்து மரமாகத் தான் இருக்க வேண்டும்’ என்று நான் எண்ணிக்கொண்டேன்.

இந்த மரம் குறிப்பிட்ட ஒரு காலத்தில் தான் 'பொன் சொரிவது' எனப் பூக்களைக் கொத்துக் கொத்தாய், சரம் சரமாய்,