பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்கொன்றை பூக்கும்போது... 173

பிஸ்கட் பிஸ்கட்!

என்ன பிஸ்கட்?

ஜம் பிஸ்கட்!

என்ன ஜம்?

ராஜம்னு,

அது என்னைப் பத்திதான்.”

'ஒகோ'... உன் பேரு ராஜம்கிறதை நேரடியாகவே சொல்லியிருக்கலாம்!”

"என் அக்கா பேரு என்ன தெரியுமா? த்ரீஸைட் பியூட்டி!” என்று அவளாகச் சொல்ல தொடங்கியதும் நான் வியப்புற்றேன்.

“என்னது? என்ன பேரு?"

"உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. அதை நான் என்னைக்கோ புரிஞ்சுக்கிட்டேன். எங்க அக்கா பேரு திரிபுர சுந்தரி. அவள் படித்த பள்ளிக்கூடத்திலே சில வால்கள் இருந்தாங்க. எந்தப் பெயரையும் இஷ்டம்போல் ஆங்கிலப் படுத்தி, கேலியாச் சொல்லுவாங்க. அக்கா த்ரீ ஸைட் பியூட்டியாக மாறிவிட்டா. அப்படி இருக்க விரும்பாத அக்கா தன் பெயரை சுந்தரின்னு சுருக்கிக் கொண்டாள்..."

வெளியே தோட்டத்திலிருந்து அக்காளின் குரல் வெடித்தது: "ஏ தடிக்குரங்கு! இங்கே வா. உன் மண்டையைக் குழைச்சு மாவிளக்கு ஏத்துறேன்..."

தங்கச்சி தன் குறையை உணரவில்லை. பதிலுக்குக் கத்தினாள்: 'நான் ஆயிரம் வாட்டி சொல்லியாச்சு - ஒட்டுக் கேட்காதே, ஒட்டுக் கேட்காதேன்னு. எனக்கென்ன! நீ அடுத்த சென்மத்திலே பல்லியாத்தான் பொறக்கப் போறே!’

நான் சிரிக்காமல் எப்படி இருக்க முடியும்? இதனாலும் அக்காளின் கோபம் அதிகரித்துத் தான் இருக்கும்.

அவளுக்குக் கோபம் ஏற்பட்டு வளர எத்தனையோ காரணங்கள் சேர்ந்திருந்தன.

ஒரு சமயம், ராஜம் 'அக்கா படிக்கிறதுக்கு புத்தகம் வேனுமாம். ஏதாவது புக் கொடுங்களேன்' என்று கேட்டாள்.

"இங்கே இருக்கிற புத்தகம் எதுவும் உன் அக்காளுக்குப் பிடிக்காது. உன் அக்காளுக்குப் பிடிக்கும்படியான கதைகள், புத்தகங்களை நான் படிப்பதுமில்லை; வாங்குவதுமில்லை” என்றேன்.