பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 வல்லிக்கண்ணன் கதைகள்

வாய்ப்பு வருகிறபோது ஏற்றுக்கொண்டால் நல்லது. அதற்கு உரிய 'மூட்' இல்லை, நேரமில்லை என்று அதை ஒதுக்கி விடுவதனாலும், அவசரத்தினாலோ வேறு எதனாலோ அலட்சியப்படுத்துவதனாலும் நஷ்டமே ஏற்படும். உமக்கு மட்டுமல்ல. நுண்ணிய உணர்வுகளைத் தன்னுள்கொண்ட கவிதை நூலுக்கும்தான்!...

என் உள்ளத்தில் சிறு வேதனை ஏற்படுகிறது. 'அந்தப் புத்தகம்' எனக்குப் புரிய வைத்திருக்கக் கூடிய எத்தனையோ உண்மைகளை, அனுபவங்களை, நான் புறக்கணித்து விட்டேன்... பாவம், அந்த 'உணர்வுப் புத்தகம்!' தன் வாழ்க்கையையே பாழாய், பயனற்றதாய், ஆக்கிக்கொண்டிருக்கிறது!

இதோ, இவ்வருஷமும் பொன்கொன்றை பூத்துக் குலுங்குகிறது. ஆண்டுதோறும் அது பூத்துக்கொண்டேதான் இருக்கும்.

இதைப் பார்க்கும்போதெல்லாம், அனுதாபத்துக்கு உரிய அந்தப் பெண்ணின் சோக சித்திரமும் என் உள்ளத்தில் மலர்கிறது.

(தீபம்', 1968)


அக்கரைப் பச்சை


டற்கரைக் கோயிலை ஒட்டிய வெளிப்புறத்தில், சிறிய கைப்பிடிச் சுவர் மீது அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் புன்னைவனம். பிரகாரத்தில் போய் வந்து கொண்டிருந்த ஆட்கள் நல்ல வேடிக்கைப் பொருள்களாக விளங்கிய போதிலும், கிழக்கே விரிந்து கிடந்த கடலும் வானமும், கரையை ஒட்டியிருந்த மணல் மேடும் ஒரு சில மரங்களும் தந்த காட்சி இனிமையே அவருக்கு மிகுதியும் பிடித்திருந்தது.

இவை எல்லாம் அவருக்கு மன அமைதியைத் தந்தன என்று சொல்வதற்கில்லை. அந்த அமைதியும், அதனால் பிறந்த ஆனந்தமும் அவரை விட்டு விலகிப் போய் எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. உலகத்தின் அதிசயங்களையும் அழகுகளையும் கண்டு களிப்புதற்காக ஊர் சுற்ற வேண்டும்; நம்முடைய காலம் பூராவும் நமக்கே சொந்தமாக அமைதல் வேண்டும் என்ற பிடிவாதத்தோடுதான் அவர் வாழ்க்கைப் பாதையில் அடி எடுத்து வைத்தார். அந்த உறுதியும் ஊக்கமும் உற்சாகமும் அவரிடம் இப்போது இல்லை. 'ஏதோ பழக்க தோஷத்தினால்தான்' அவர் இப்போதெல்லாம் இயங்கி வருகிறார். -