பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்கரைப் பச்சை 181

ரசனைக்கு விருந்து அளித்தன. ஆனாலும், வறண்ட மணற் பாலையின் வெறுமையும் தனிமையும்தான் அவர் உள்ளத்தில் நிலைபெற்றிருந்தது.

‘அங்கேயே என்ன பார்க்கிறே? வேடிக்கை ஏதாவது இருக்குதா?’ என்று அவர் அருகில் ஒலித்த ஒரு குரல் அவரை உலுக்கித் திருப்பியது. - -

ஒரு சிறுமி, ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். அவரை அதிசயமாக நோக்கியவாறு அவர் பக்கத்தில் நின்றாள். அவள் தனியாகத்தான் காணப்பட்டாள். அவர் தன் கேள்விக்குப் பதில் எதுவும் சொல்லாமல், தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு பொறுமை இழந்து, 'ஊங்?’ என்றாள்.

'ஒண்ணும் இல்லியே! என்றார் அவர்.

'பின்னே அப்பவே புடிச்சு அங்கேயே பார்த்துக்கிட்டு இருக்கியே? நான் வந்து எவ்வளோ நேரமா நிக்கிறேன். உனக்குத் தெரியாதே! என்று, கூச்சமோ தயக்கமோ அச்சமோ, இல்லாமல் பேசினாள் அவள்.

அவருக்கு அவள் பேச்சும் துணிச்சலும் சுவையான விஷயங்களாகப்பட்டன. லேசாகச் சிரித்தார். 'பொழுது போகலே. துணைக்கு யாரும் இல்லே. அதுதான் உட்கார்ந்திருக்கேன்’ என்றார்.

'உனக்கு அப்பா அம்மா இல்லே? யாருமே இல்லையோ?' என்று கேட்டாள் சிறுமி.

'ஊகுங். ஒருத்தரும் இல்லை' என்று கூறித்தலையை ஆட்டினார் அவர்.

அவள் கலகலவெனச் சிரித்தாள்.

'இப்ப ஏன் சிரிக்கிறே?' என்று அவர் விசாரிக்கவும், அவள் தந்த பதில் அவருக்கும் சிரிப்பு எழுப்பியது.

'உன் தலையை மொட்டை அடிச்சிட்டால், அப்போ நீ தலையை ஆட்டினால், எப்படி இருக்கும்னு நெணைப்பு வந்தது. அதுதான்!' என்று அவள் சொன்னாள். 'எனக்கு மொட்டை போடணுமின்னு சொன்னாங்க. அதுதான் நான் ஒடியாந்துட்டேன். எனக்கு எதுக்கு மொட்டை? மொட்டை மொட்டை மொளக்கு ஸார் - கம்பளி மொட்டை டேக்கு ஸார்' னு புள்ளைகள் எல்லாம் கேலி பண்ணுறதுக்கா? அப்புறம் நான் தலைபின்னி பூ வைக்க முடியுமா?’ என்று பொரிந்து கொட்டினாள். - -