பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182 வல்லிக்கண்ணன் கதைகள்

அவள் வேடிக்கையான குழந்தை என்று தோன்றியது அவருக்கு. உன் பேர் என்ன?’ என்று கேட்டார்.

'கேலி பண்றதுக்கா?’ என்று வெடுக்கெனச் சொல் உதிர்த்தாள் சிறுமி.

'நான் ஏன் கேலி பண்ணப் போறேன்!'

‘தெரியும் தெரியும். எல்லாப் புள்ளைகளும்தான் கேலி பண்ணுதே. வள்ளி அம்மே தெய்வானே, உம்புருசன் வைவானேன்? கச்சேரிக்குப் போவானேன் - கையைக் கட்டி நிப்பானேன்னு நீட்டி நீட்டி ராகம் போடும். அது மாதிரி நீயும்...'

'உன் பேரு வள்ளியா?'

அவள் ஒரு விரலால் ஒரு கண்ணை மூடிக்கொண்டு, தலையைச் சாய்த்தபடி, வெட்கப் பார்வை பார்த்தது ரசமான காட்சியாக இருந்தது.

'ஏட்டி, இங்கே வந்தா நிக்கிறே? உன்னை எங்கே எல்லாம் தேடுவது? அந்த மாமா கிட்டே என்ன வம்பு பண்ணுறே? என்று சத்தமிட்டுப் பேசிய வாறே பிரகாரத்தில் வந்தார் ஒரு பெரியவர்.

‘எங்க அப்பா. புடிச்சிட்டுப் போக வாறா. எனக்கு மொட்டை போட வேண்டான்னு நீ சொல்லுவியா?’ என்று புன்னைவனத்தோடு ஒண்டி நின்றாள் வள்ளி.

'பெரிய வாயாடி லார் அது. கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும். தொந்தரவு பண்ணி, பிய்ச்சுப் பிடுங்கி எடுத்துவிடும். சரியான குட்டிப்பிசாசு. இங்கே வாடி' என்று கூச்சலிட்டவாறே வந்தவர், புன்னைவனத்தைக் கண்டதும் வியப்பினால் வாயபிளந்து நின்றார். 'புன்னைவனம்!... புன்னைவனம் தானே நீங்க?' என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்.

அவரை இனம் தெரியாதவராய்த் திகைத்தபடி நோக்கினார் புன்னைவனம்.

'ஏஹே, பேரைப் பாரு பேரை! புன்னைமரம்...' என்று கெக்கலி கொட்டினாள் வள்ளி.

'ஏட்டி இந்தா வாறேன்!' என்று சொல்லி, சிறுமியின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைப்பதற்காகப் பாய்ந்தார் வந்தவர்.

ஆனால் புன்னைவனம் சிரித்துக்கொண்டே அவளைப் பாதுகாப்பாய் அனைத்து, 'சின்னப்புள்ளே தானே! விட்டுவிடுங்கள்' என்றார்.