பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்கரைப் பச்சை 185

உங்களுக்குத் துணைக்கு வந்தாச்சு. இனிமே நீங்க ஒத்தை இல்லே' என்றாள்.

புன்னைவனத்தின் உள்ளம் கிளுகிளுத்தது.

'சிவகாமி, ஸாருக்கு என்ன வயசு இருக்கும்னு உனக்குத் தோணுது?’ என்று அருணாசலம் அவர் மனைவியிடம் கேட்டார்.

'எனக்கு என்ன தெரியும் என்றாள் அந்த அம்மாள்.

'சும்மா உனக்குத் தோணுவதைச் சொல்லேன்' என்று அவர் சொல்லவும், 'முப்பத்தாறு, முப்பத்தேழு இருக்கும்’ என்று அவள் தயக்கத்துடன் கூறினாள்.

மீண்டும் தமது கடகடச் சிரிப்பை உருட்டிவிட்டார் அருணாசலம். 'இவருக்கு ஐம்பதுக்கு மேல் ஆகுது. அப்போ இருந்தது மாதிரித்தான் இப்பவும் இருக்கிறார். நான்தான் கிழவன் ஆகிப்போனேன். பார்க்கப்போனால், இவரைவிட நான்கு வயசு குறைவு தான் எனக்கு!’ என்றார்.

அவள் அவர்மீது ஏவிய பார்வையில் அன்பு மிதந்தது. அவரது முதுமையையோ இதர குறைகளையோ அவள் பெரிதுபடுத்துவதாகத் தோன்றவில்லை. இதைப் புன்னைவனம் கவனிக்கத் தவறவில்லை. .

இப்படி எத்தனையோ அக்குடும்பத்துடன் அவர் பொழுது போக்க நேரிட்ட சில மணி நேரத்தில், இல்லறத்தில் நிலவும் பல இனிமைகளை அவர் உணரமுடிந்தது. அவர்களுக்குள் மனக்கசப்பும், பிணக்கும், வாக்குவாதமும் ஏற்படக் கூடும். என்றாலும் அவற்றை எல்லாம் மீறிய ஒரு பிணைப்பு, ஒட்டுறவு, பரஸ்பரத் துணை நெருக்கம் அவர் உள்ளத்தில் சிறு சிறு அலைகம் எழுப்பின.

'ஒற்றைக் காட்டு ஒரியாக வாழ்ந்து பழகிவிட்ட போதிலும் புன்னைவனம் குடும்ப வாழ்வில் திகழும் சிறுசிறு இனிமைகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கண்டு, தன் வாழ்வின் வறட்சியை எண்ணி, ஒருவித ஏக்கம் வளர்ப்பது சென்ற சில வருடங்களாகவே அவருடைய புதுப் பழக்கம் ஆயிருந்தது. இப்பொழுதும் அந்தக் குறுகுறுப்பு இருந்தது அவர் உள்ளத்தில்.

ஒரு சந்தர்ப்பத்தில், சிவகாமி 'நான் என்ன தங்கமும் வைரமுமா கொண்டு வந்தேன்?’ என்றாள். அதற்கு அருணாசலம், 'எனக்கு நீயே மணியான வைரமாகக் கிடைத்திருக்கிறே. அதே போதும்’ என்று சொன்னார். மகிழ்ச்சியும் நாணமும் முகத்திலே தவழ, அவள் தலைகுனிந்தபோது, அந்த முகம்