பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துரும்புக்கு ஒரு துரும்பு 191

அவமதிக்கவும் அதட்டவும் எரிந்து விழவும் ஏசவும் ஒரு ஜீவன் இருந்தது. வாழ்க்கை விசித்திரங்களில் இதுவும் ஒன்றுதான்.

வெயிலில் சூடு அதிகரித்துக்கொண்டிருந்த நேரம்.

'ஒரு எடை' விறகை அடுக்கி, தள்ளுவண்டியை சிரமத்தோடு உருட்டி வந்த ரங்கனின் உடல் சூட்டினால் பாதிக்கப்பட்டது பேர்ல, உள்ளமும் சூடேறிக்கொண்டிருந்தது.

'இரண்டு மைல் வண்டியை தள்ளிச்செல்லனும். அதனாலே எனக்கு எக்ஸ்ட்ராவாக ஒரு ரூபா தரணும்' என்று கேட்டான் ரங்கன்.

'நியாயமான கூலி மூணு ரூபா தானே? நான் ஏன் அதிகமாத் தரனும்? தரமுடியாது' என்று உறுதியாக மறுத்தார் வாடிக்கையாளர்.

அவன் முரண்டு பிடிக்கவும், அவர் ஏசினார். அவன் முணமுணத்தபடி வண்டியைத் தள்ளிச் சென்றான்.

ரங்கன் சிறிது தூரம் சென்றுவிட்டான். அவனைத் தேடி வந்த ஒருத்தி வேகம் வேகமாக நடந்து வண்டி அருகே சேர்ந்தாள்.

'என்னா, கஞ்சி வேண்டாமா? நான் வாறதுக்குள்ளாறே நீரு வண்டியை தள்ளிக்கிட்டுக் கிளம்பிட்டீரே?' என்று கேட்டாள். சிரித்தாள்.

ரங்கன் முறைத்தான், 'ஏ. மூளை கெட்ட முண்டம் மனுசன் எத்தினி நேரம் காத்திருப்பான்? நீ எங்கே ஒழிஞ்சு போயிருந்தே சவத்துமூளி! காலா காலத்திலே கஞ்சி கொண்டு வரணும்கிற அறிவு வேணாம்? நீ சோத்தைத் திங்கியா? இல்லே, வேறே எதையும் திங்கியா?’ சூடாக வார்த்தைகளைக் கொட்டினான்.

இது சகஜம் என்பதுபோல் தலையை ஒருவெட்டு வெட்டி னாள் அந்தப்பெண். முகத்தைச் சுளித்தாள். 'இப்ப கஞ்சி குடிக்கப் போறியா இல்லியா? என்றாள்.

'வழிச்சு நக்குற நாயே! இதையும் நீயே கொட்டிக்கிடலாம்னு பாக்கியா?’ என்று உறுமினான் ரங்கன். 'அந்த மரத்தடி நிழலுக்குப் போடி, முண்டம். வண்டியை நிறுத்திட்டு வாறேன் என்றான்.

அவள் அலட்சிய பாவத்தோடு மரநிழலை நோக்கி நடந்தாள், அவன் மனைவி அவள்.

(வஞ்சிநாடு 1983)