பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கம்பீரஜன்னி

ண்ணங்களிலேயே வாழ்ந்து கொண்டிருந்தான் அவன். அவனைத் தெரிந்து வைத்திருத்தவர் பலரும், 'கைலாசம் தானே! ஒரு மாதிரி டைப். முற்றிலும் லூஸ் என்று சொல்ல முடியாது. புத்திசாலித்தனமாகக் காரியங்கள் செய்கிறான் என்றும் சேர்த்துக் கொள்ள முடியாது. அசடு, அப்பாவி என்று தோன்றும் அவனைப் பார்த்தால். அவன் செய்து விடுகிற சில செயல்களைக் கவனிக்கையில், அயோக்கியன் - வீணன் என்றே அவனை மதிப்பிடத் தோன்றும்' என்று சொல்லுவார்கள்.

கைலாசம் மற்ற எல்லோரையும் போல நடந்து கொள்வதில்லை. 'உலகத்தோடு ஒட்ட ஒழுகக் கற்றுக் கொள்ளவில்லை. தன் எண்ணங்களையே பெரிதாக மதித்து எப்படி எப்படியோ நடந்து வந்தான் அவன்.

எண்ணங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. எண்ணங்களும் வாழ்வின் ஒரு அம்சம்தான். ஆனால், எண்ணங்கள் தான் வாழ்க்கை என்று கருதினான் கைலாசம். அதனால், எண்ணங்களிலேயே வாழ முயன்றான் அவன்.

கைலாசம் ஒல்லியான நபர். ஐந்தடி உயரம்தான் இருப்பான். நடமாடும் எலும்புக்கூடு என்று அவன் தன்னைப் பற்றி எண்ணியதிலலை. வீமன், ஹெர்குலிஸ் என்றெல்லாம் கதைகளில் வருகிறார்களே அவர்களின் இந்த நூற்றாண்டு வாரிசு அவனே தான் என்பது அவன் எண்ணம்.

வீதி வழியே போகிறான் கைலாசம். மிடுக்காக ஏறுபோல. அந்தக் காலத்து ராமனும் அவனும் இவனும் இப்படித்தான் நடந்திருப்பார்கள். இருந்தவளை, போனவளை, வந்தவளை, அவளை இவளை எல்லாம் வளை இழந்து விழித்துக் கொண்டு தவிக்கும்படி செய்த புண்ணியவான்கள்! இவனையும் அப்படித்தானே எல்லோரும் - பெண்கள் தான். மற்றவர்கள் பார்த்தால் என்ன; பாரா தொழிந்தால் அவனுக்கு என்ன? - கண்ணினால் விழுங்குகிறார்கள்.

கைலாசத்தின் கண்களில் தனி ஒளி சுடரிடுகிறது. முகத்தில் ஒரு பிரகாசம் ஜொலிக்கிறது. அவன் அழகில் மயங்கி, அவனை ஆசையோடு பார்க்கும் பெண்களைப் புன்முறுவலோடு கவனிக்கிறான்.