பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194 வல்லிக்கண்ணன் கதைகள்

ஆகவே, 'ஐயோ பாவம்! வழியே போ!' என்று அந்த பஸ்ஸை விட்டு விடுகிறான் கைலாசம்.

கைலாசத்தின் மூளை அதிசயமானது தான். அங்கு ஒரு எண்ணம், நீரில் குமிழிடும் சிறு வட்டம் போல், கனைக்கும். அதைத் தொடரும் மற்றொரு முறை முகிழ்த்திடும் நுரை மொக்குகள் போல் எண்ணத்திவலைகள் கூடும். நெரிக்கும். மலரென விரியும். சிரிக்கும்.

அன்றாட வாழ்வின் வெறுமையும் வறட்சியும் மாயமாய் மறைய, புதியதோர் வாழக்கை பசுமையாய், இனிமையாய், குளுமையாய், எழிலாய் அவனுள் உயிர்க்கும்.

இப்படி மலரும் எண்ணங்களில் வாழ்ந்தான் அவன். எண்ணங்களையே வாழ்க்கையாக மதித்தவன் கைலாசம்.

அவனை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அது அவன் தவறா? அதற்காக அவன் தன் இஷ்டம் போல் வாழ்வதை விட்டு விடுவானோ? எண்ணங்களே அவனுடைய உலகம்.

கைலாசம் நடையாழ்வானை நம்பி வாழ வேண்டியவன். எவ்வளவு தூரம் போக வேண்டுமாயினும் நடந்துதான் போவான். டாக்சிக்கும் ஆட்டோவுக்கும் கொட்டி அழ அவனிடம் பணம் ஏது? பஸ்ஸுக்குக் காசுதர மனம் இராது. அந்தக் காசுக்குக் காப்பி குடிக்கலாமே! ஆகவே, அவன் நடக்கிறான்.

அவனுடைய எண்ணங்கள் முடங்கியா கிடக்கும்? அவையும் துள்ளுகின்றன.

டாக்... டாக்... டாக்! குளம்பொலி சிதற, கம்பீரமாகப் போகிறது குதிரை. மிக நேர்த்தியானது. கறுப்பு வெல்வட் போல் மினுமினுக்கும் உடல். மின்னித் துள்ளும் பிடரி மயிர். நெற்றியில் மட்டும், ஜோரான பொட்டுப் போல், வெள்ளை படிந்திருக்கிறது. அழகுக்கு அழகு சேர்க்கும் சிறப்பு அது. மிடுக்கான குதிரை மீது எடுப்பாக சவாரி செய்கிறவன் -

தெருவே பிரமிக்கிறது. யாரது? தெரியாது? மிஸ்டர் கைலாசம்... திருவாளர் கைலாசம்... நம்ம கைலாசம்!

என்னதான் சொல்லும் - காரு கீரு எல்லாம் குதிரை பக்கத்திலே நிற்க முடியாது. குதிரைதான் ஜோர். ராஜரீகம். கம்பீரத்துக்கு எடுப்பு... கைலாசம் கடகடவெனச் சிரிப்பை உருள விடுகிறான். தங்க நாணயங்களைக் குலுக்கிச் சிதறுவது போல.

கைலாசம் சங்கோசப் பேர்வழி. அதிகாரிகளிடம், பெரிய மனிதர்களிடம், உருட்டல் மிரட்டல் காரர்களிடம் பேசவே