பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூக்கபிள்ளை வீட்டு விருந்து

மூக்கபிள்ளையின் மனசாட்சி திடீரென்று உறுத்தல் கொடுக்க ஆரம்பித்தது.

அது அப்படி விழிப்புற்று அரிப்பு தருவதற்கு பத்திரிகைகளில் வந்த சில செய்திகள்தான் காரணமாகும்.

சுகமாய் சவாசனம் பயின்று கொண்டிருக்கிற மனசாட்சி சிலபேருக்கு என்றைக்காவது திடும் விழிப்புபெற்று, குடை குடை என்று குடைந்து, முன் எப்பவோ பண்ணிய பாபத்துக்கு - அல்லது தவறுக்கு - பரிகாரமாக இப்போது செயல் புரியும்படி தூண்டி துளைப்பது ஏனோ தெரியவில்லை. மனித மனம், மனசாட்சி என்பதெல்லாம் விசித்திரமான தத்துவம் என்றோ, எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத புதிர் என்றோதான் எண்ணவேண்டி இருக்கிறது.

மூக்கபிள்ளை அப்படித்தான் நினைத்தார். 'வடக்கே ஒரு ஊரில்' எவனோ ஒருவன் எப்பவோ ஒரு காலத்தில் ரயிலில் டிக்கெட்டு வாங்காமலே பிரயாணம் செய்திருந்தானாம். பலப்பல வருடங்களுக்குப் பிறகு இப்போ அவன் தனது தவறை உணர்ந்து வருத்தப்பட்டு ரயில் கட்டணமும் அபராதத் தொகையும் சேர்த்து ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி நல்ல பேரும் பத்திரிகைப் பிரபலமும் பெற்றுக் கொண்டான்.

தெற்கே ஒரு நபரும் அதே மாதிரி, மனசாட்சியின் தொந்தரவுக்குப் பணிந்து எந்தக் காலத்திலோ இலவசமாக செய்திருந்த பிரயாணத்துக்கு உரிய பணத்தையும் அதற்கான வட்டியையும் சேர்த்து ரயில்வேக்கு அனுப்பி வைத்தான். இதுவும் பத்திரிகைச் செய்திதான்.

இவையும் இவைபோன்ற வேறு சில தகவல்களும் மூக்கபிள்ளையின் கவனத்தைக் கவர்ந்து. மனசில் ஆழமாய் பதிந்து, உள்ளுற வேலை செய்யலாயின.

"தன்னெஞ்சறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன் னெஞ்சே தன்னைச் சுடும். திருவள்ளுவர் பெரிய ஆளு தான்.