பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவத்தப்புள்ளை 201

ரஞ்சிதம் சிவப்பாக இருந்தாள். சிரித்துச்சிரித்துப் பேசினாள். ஒய்யாரமாக நடந்தாள், ஒயிலாக நின்றாள்; நெளிந்தாள். கறுவண்டுக் கண்களால் கவ்வுவதுபோல் பார்த்தாள், எனவே பார்த்த அனைவர் உள்ளத்திலும் இடம் பெற்றாள்.

சுற்று வட்டாரத்துக் கோயில்களில் கொடை விசேஷ விழா என்று எது வந்தாலும், சுப்பய்யாவுக்கு அழைப்பு வரும்; யாரை ஏற்பாடு பண்ணினாலும் பண்னாவிட்டாலும். அந்த சிவத்தப் புள்ளையை கண்டிப்பாக் கூட்டிட்டு வந்திரனும் என்று வலியுறுத்தப்படும்.

அப்படிக் கோருகிறவர்கள் ஆசையை நிறைவேற்றி வந்த சுப்பய்யா, 'அது சாத்தியம் இல்லிங்க, அது இப்ப நம்பகையிலே இல்லை' என்று சொல்லக்கூடிய காலமும் வந்தது.

'அது இப்பல்லாம் இதுமாதிரி ஆட்டத்துக்கு வாறதில்லே. ஸ்பெஷல் டிராமாவிலே நடிக்கப் போகுது. பெரிய நடிகைன்னு நினைப்பு அதுக்கு' என்று சுப்பய்யா குறைபட்டுக் கொள்வதும் சகஜமாயிற்று.

ஸ்பெஷல் நாடகமேடையின் ஜோதியாக மாறிவிட்ட ரஞ்சிதம் மேலும் கீர்த்தியும் கவனிப்பும் பெற்றாள். அவளது ஊரின் பெயரும் பரவியது.

'அந்த சிவத்தப்புள்ளை நடிக்குதோ இல்லையோ - அதுகிட்டே நடிப்புத்திறமை இருக்கோ இல்லியோ - அது சும்மா மேடையிலே வந்து நின்னு, கண்களை ஒரு சுழட்டுச் சுழட்டி, ஜோரா ஒரு சிரிப்பு சிரிச்சாலே போதும். நாடகம் பார்க்க வந்தவங்க அப்படியே சொக்கிப் போவாங்க சொக்கி!' இவ்விதமான பாராட்டுரைகள் தாராளமாகவே கிடைத்தன அவளுக்கு.

இந்தச் சந்தர்ப்பத்தில் ராஜப்பா என்கிற ஷோக்சுந்தரம் ரஞ்சிதத்தின் துணைவனாய், பாதுகாப்பாளனாய் இருந்து வந்தான். தெருக்கூத்து ஆட்டக் காரியாக இருந்த சிவத்தப் புள்ளையை நாடகமேடை இளவரசி மிஸ் ரஞ்சிதமாக உயர்த்தியவனே அவன்தான்.

நாடகக்கலையை உய்விக்க வேண்டும் என்கிற தாகத்தை விட, நாடங்களில் நடிக்க வருகிற சுந்தரிகளையும் சிங்காரி ஒய்யாரிகளையும் அனுபவித்து ஜாலி பண்ண வேண்டும் எனும் மோகமே ராஜப்பாவை இயக்குவித்தது. அவனிடம் பணவசதி இருந்தது. ஊக்குவிக்கும் நண்பர்களும் சேர்ந்தார்கள். அவன் நாடகக் கான்ட்ராக்டர் ஆகி 'ஸ்பெஷல் டிராமா' க்கள் நடத்தி வந்தான். வெவ்வேறு ஊர்களில்.