பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவத்தப்புள்ளை 203

ரஞ்சிதம் எதிலாவது வருகிறாளா என்று அந்த வட்டாரத்தினர் முழித்துப் பார்த்தார்கள்.

ஒரு படம் வந்தது. அதில் கும்பல் காட்சியில் கூடிநின்று கும்மி அடித்து குதியாட்டம் போட்ட ஒருத்தியை கவனித்த ஒருவர், 'இது நம்ம ஊர் சிவத்தப்புள்ளை இல்லையா?’ என்றார்.

கூட இருந்தவர்களும் உற்று நோக்கினார்கள். 'ஆமா. அவளே தான். ரஞ்சிதம் தான்' என்று சாட்சி கூறினார்கள்.

செய்தி வேகமாகப் பரவியது. சினிமாவில் நடிக்கும் சிவத்தப்புள்ளையை தரிசிப்பதற்காக தினசரி கூட்டம் திரண்டது.

"சினிமாவிலே நடிக்கப் போயிருக்குதே சிவத்தப்புள்ளை அதுக்கு இந்த ஊருதான்' என்று பேசுவதில் பெருமை கொண்டார்கள் அவ் வட்டாரத்தினர்.

'ஹூம் என்ன பிரமாதமா நடிச்சுக் கிழிச்சிட்டா கும்பலோடு கும்பலாவந்து போற எக்ஸ்ட்ராவா தானே சான்சு கிடைச்சிருக்கு!' என்று ராஜப்பா குறைகூறினான்.

'கும்மியாட்டம், கூத்துக்குதிப்பெல்லாம் சினிமாவிலே பண்ணுதே ரஞ்சிதம், அதுக்கு டிரெயினிங் குடுத்ததே நாமதான். ஆரம்ப காலத்திலே, நம்ம கையிலே இருந்துதே ஒரு சிவத்தப்புள்ளை அதே தான் இது என்று சுப்பய்யா சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போனான்.

அந்த ஒரு படத்துக்குப் பிறகு, ரஞ்சிதத்தின் நிழல் வேறு எந்தப் படத்திலும் காட்சி தரவுமில்லை. அவள் என்ன ஆனாளோ, சிவத்தப்புள்ளையூர் வாசிகளுக்கு அதுவும் தெரியாது.

'என்ன தெரியாதா! இங்கேயிருந்து அதை கூட்டிக்கிட்டுப் போனானே அவனோட ஆசை நாயகி ஆகியிருப்பா. அவ அலுத்துப்போனதும் அவன் அவளை கைவிட்டிடுவான். பிறகு யார் யார் தயவிலோ வாழவேண்டியிருக்கும். ஒளியைக்கண்டு மயங்கித் தாவுற விட்டில் கதைதான். சிவத்தப்புள்ளை - ஹூம்ப், பாவம், அவ்வளவு தான்!, என்று அனுதாபம் உதிர்த்தான் ராஜப்பா.

('வஞ்சிநாடு 1980)