பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208 வல்லிக்கண்ணன் கதைகள்

கைலாசம் சுவர் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவன் கண்களில் நீர் சுரந்தது. அவன் உள்ளம் கனப்பது போல் ஒர் உணர்வு.

விநாயகம் தன் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போனார். 'பெரிய அதிசயங்கள் நம்மைச் சுற்றிலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கு. மனுசங்க தான் நேரம் காலம் எல்லாம் அறிய கடியாரம், காலண்டர், பஞ்சாங்கம் என்று தயார் பண்ணி வச்சிருக்காங்க காரியங்கள் ஒழுங்கா நடைபெறனும்கிறதுக்காக புரோகிராம், டைம் டேபிள், கால அட்டவணை இப்படி என்னென்னவோ சொல்லித் திட்டமிடுறாங்க. ஆனா இயற்கை கடியாரம் இல்லாம, டைம் டேபிள், புரோகிராம் எதுவுமே இல்லாம வேலை செய்யுது. ரொம்ப கரெக்டா, கால நியதி தவறாமல் காரியங்கள் நடைபெறுது. பூக்கள் அந்தந்த வேளைக்கு, அந்த அந்தக் காலத்துக்கு உரிய முறைப்படி பூத்துக் குலுங்குது, காய்கள் கனிகள் உண்டாகுது...

'இந்த அரசமரத்தைப் பாரேன். ஒரு சந்தர்ப்பத்திலே மொட்டையாய் மூளியா மாறி நிற்குது. பிறகு, அதுக்கே ஏதோ சிலிர்ப்பு ஏற்பட்டது மாதிரி, உள்ளுற உணர்ச்சிப் பரவசம் பெற்றது போல, இலை மொக்குகளை வெளிப்படுத்துது. தாமிரத் தகடுகள் போல, செம்மையான கண்ணாடித் துண்டுகள் போல, துளிர்கள் மரம் பூராவும் பரந்து காணப்படுது. மறு நாள் அவை எல்லாம் நிறம் மாறி மயக்குது. அப்புறம் இளம் பசுமையாய், பிறகு குளுகுளு கிளிப்பச்சை நிறமாய் இலைகள் மிளிருது. பார்க்க எவ்வளவு இனிமையாக இருக்கு! இதை எல்லாம் நீயும் கவனிச்சிருப்பேன்னு நினைக்கிறேன்...'

கைலாச் வாய் திறந்து ஒரு வார்த்தைக.டச் சொல்லவில்லை.

'இரவின் அமைதியான நேரத்தில், அரும்புகள் ஒளியும் மணமும் பெற்று இதழ்களாக விரியும் ஒசையைக்கேட்க முடிகிறது என்று ஒரு கவிஞன் எழுதியிருக்கிறான். பூச்செடி அருகில் அமர்ந்து, அப்படி நுட்பமான ஒலியை நானும் கேட்க முடியுமா என்று கவனிக்கணும்கிற ஆசை எனக்கு உண்டு. அதுமாதிரி எண்ணம் உனக்கு எப்பவாவது வந்தது. உண்டா கைலாசம்?’ என்று கேட்டுவிட்டு, சன்னல் வழியாக வெளியே பார்த்தார் விநாயகம்.

அவன் திரும்பி அவரை நோக்கினான். அவன் விழிகள் ஏதோ அறியத் தவிப்பன போல அவர் முகத்தில் மொய்த்தன. பிறகு இமைகளை இழுத்து மூடிக்கொண்டான்.