பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

அவர் போனதும் அந்த அறையில் நிலவி நின்று ஒரு பிரகாசம், மங்கிவிட்டது போல் கைலாசத்துக்குத் தோன்றியது.

அவர் தன் சீக்கைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை என்பதோ, ஒய்வு எடுத்துக் கொள்! உடம்பை நல்லா கவனி" என்ற ரீதியில் இதமான வார்த்தைகள் கூறவில்லை என்பதோ, இப்போது அவன் உள்ளத்தில் உறுத்தவில்லை. விநாயகம் பிள்ளை இன்னும் கொஞ்ச நேரம் அங்கிருந்து மேலும் பல விஷயங்கள் பற்றிப் பேசாமல் போய்விட்டாரே என்று தான் அவனுக்குத் தோன்றியது.

அவர் சொன்னவை இன்னும் காதக்குள் ரீங்காரம் செய்வது போலிருந்தது அவனுக்கு. அவரோடு சேர்ந்து அந்த ஒட்டலுக்கும், அருவிக் கரைக்கும், பஸ் நிலையத்துக்கும் போக வேண்டும். அவர் சுட்டிய இனிமைகளை எல்லாம் - மற்றும் அவை போன்ற நயங்கள் பலவற்றையும் - ரசித்து மகிழத் தவறிவிட்டோமே என்ற வருத்தம் ஏற்பட்டது அவன் உள்ளத்தில்.

அவன் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். அப்போது இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் பார்வை சன்னல் வழியாக வெளியே புரண்டது.

எலெக்ட்ரிக் விளக்குகள் ஒளிச்சிதறி மின்னின. விதம் விதமாக, பல வர்ணங்களில், பல வடிவங்களில்.

ஒரு திசையில், நெடுந்தொலை வரை பார்வை செல்வதற்கு இடம் இருந்தது. அங்கே இருட்டும் ஒளிக்கோலங்களும் இணைந்த தோற்றம் மிகக் கவர்ச்சி நிறைந்ததாக விளங்கியது.

'இப்படிப்பட்ட இனிமைகள் பலவும் என்னால் ரசிக்கப் படாமலே இயங்குகின்றன. நான் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது பேதமை, என்று அவன் மனம் சொன்னது. இனியும் இப்படியே சோர்ந்து கிடப்பது சரியல்ல என்ற எண்ணம் அவனுள் எழுந்தது. அப்போதே அவனிடம் ஒரு புது சக்தி பிறந்து விட்டது.

(அமுதசுரபி, 1993)