பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜாலி அண்ணாச்சி


ரமசிவத்துக்கு ஜாலி அண்ணாச்சி என்ற பெயர் பொருத்தமாகத்தான் இருந்தது. அடிக்கடி தமாஷ் பண்ணிக் கொண்டிருக் கும் சுபாவம் அவரிடம் அமைந்திருந்தது.

அது சிறு பிராயத்திலிருந்தே வளர்ந்து வந்த குணம். சிறு குறும்புகள் புரிந்து, தன்னோடு இருப்பவர்களை சிரிக்கச் செய்ய வேண்டும் எனும் ஆசையினால் தான் அவர் அநேக காரியங்களை செய்து வந்தார்.

பரமசிவத்தின் சில்லறை விளையாட்டுகள் பிறருக்குத் தொந்தரவும் வேதனையும் கொடுத்து விடுவதும் உண்டு. ஆனாலும் அதற்காக அவர் மனவருத்தம் கொள்வதுமில்லை; தனது போக்கை மாற்றிக்கொள்ள எண்ணியதுமில்லை.

பரமசிவம் சின்னப்பயலாக இருந்தபோது, சில பெரியவர்கள் காசு கொடுத்து மூக்குப்பொடி வாங்கி வரும்படி அவரை ஏவுவது வழக்கம். சில சமயம், பரமசிவம் மூக்குப் பொடியோடு மிளகாய்ப் பொடியையும் கலந்து கொண்டு வந்து கொடுத்து விடுவார். தனது செயலின் விளைவை பார்க்க வேண்டும் என்று அவர் காத்திருப்பதில்லை. அப்படி நின்றால் அவருடைய முதுகுத் தோல் பியந்து போகக்கூடிய விபத்து ஏற்பட்டாலும் ஏற்படலாமே!

வாலிப வயதில், பெரிய கூட்டங்களுக்குப் பரமசிவம் போவது உண்டு. பொழுது போக்கத்தான். போகிறபோது, தண்ணிர்ப் பாம்பைப் பிடித்து, பத்திரமாக மறைத்து எடுத்துக் கொண்டு போவார். கூட்டம் நடைபெறுகிற போது அந்தப் பாம்பை வெளியே விட்டுவிடுவார். அவரும் நண்பர்களும் 'பாம்பு பாம்பு’ என்று கூச்சல் கிளப்புவார்கள். அந்த இடத்தில் பயமும் குழப்பமும் தலை தூக்கி விடும். மற்றவர்களின் பரபரப்பையும் பீதியையும் கண்டு பரமசிவமும் நண்பர்களும் களிப்படைவார்கள். தெருக்களில் காணப்படும் தபால் பெட்டிகளில் அவர் விளையாட்டாக தண்ணிர்ப்பாம்பை போட்டிருக்கிறார். உரிய நேரத்தில் தபால்களை எடுத்துப்போக வருகிறவர் பெட்டிக்குள் கையை விடும் போது, பாம்பு என்ன செய்யும், அந்த ஆள் எப்படி அலறி அடிப்பார் என்று ரசமாக விரிவுரை செய்து மகிழந்து போவார் பரமசிவம்.