பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214 வல்லிக்கண்ணன் கதைகள்

கல்யாணம் செய்து கொண்டார். சாந்தா எனப் பெயருடைய மங்கை நல்லாள் அவருடைய மனைவியாக வந்து சேர்ந்தாள். அவள் எடுத்ததுக்கெல்லாம் எரிந்து விழுகிற குணம் பெற்றிருந்தாள். ஓயாது தொண தொணப்பதும், அடிக்கடி அழுது புலம்புவதும் அவளது சிறப்புப் பண்புகளாக அமைந்திருந்தன. பரமசிவத்தின் சிரிப்பு வெடிகளும் பரிகாச குண்டுகளும் அந்த அம்மணியிடம் எடுபடவில்லை.

ஒரு நாள் பரமசிவம் வீட்டில் இல்லாத போது இளம் பெண் ஒருத்தி வந்தாள். நாகரீகத்தில் முற்றியவளாகத் தோன்றினாள். அவர் இல்லையா, எங்கே போயிருக்கிறார், எப்போ வருவார் என்று தூண்டித் துருவிக் கேட்டாள். அவ்வீட்டில் தாராளமாகப் பழகியவள் போல் அங்கும் இங்கும் திரிந்தாள். அதையும் இதையும் எடுத்துப் பார்த்துப் பொழுது போக்கினாள், 'சே, இன்னும் வரக்காணோமே?' என்று அலுத்துக் கொண்டாள்.

'நீங்க யாரு?' என்று சாந்தா விசாரிக்கவும், அவரை எனக்கு ரொம்ப நாளாத் தெரியும். என் பேரு சுந்தரம். இதே ஊரு தான்' என்று அறிவித்தாள் அந்தச் சிங்காரி.

அவளது நடை, உடை, பாவனைகளும், பேச்சும் செயல்களும் சாந்தாவுக்கு எரிச்சல் ஊட்டின; சந்தேகம் அளித்தன. அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனாலும், புதிதாக வந்தவளிடம் ஏசிப்பேசவும் எரிந்து விழவும் அவளுக்கு மனம் வரவில்லை. அவர் வரட்டும் என்று கருவிக் கொண்டிருந்தாள்.

பரமசிவம் வெகுநேரம் ஆகியும் வரவில்லை. மேனாமினுக்கி சுந்தரம், 'எனக்கு வேறு வேலை இருக்கு. அவசரமாக ஒரு இடத்துக்குப் போக வேண்டியிருக்கு. அவர் வந்ததும், சுந்தரம் வந்து ரொம்ப நேரம் காத்திருந்தாள்னு சொல்லு. நான் வாரேன்' என்று கூறிவிட்டு, ஸ்டைல் நடை நடந்து போனாள்.

'பீடை, பாடை, தரித்திரம்! எவ்வளவு திமிரு ரொம்ப காலத்து சிநேகமாம்! வீட்டுக்கு வந்து, உரிமையா நடந்து, என்னிடம் பெருமை கொழித்து விட்டுப் போறாளே? இப்படி ஒருத்தி சிநேகிதின்னு இருக்கிற போது இவரு ஏன் என்னை கல்யாணம் செய்து கொள்ளணுமாம்?’ என்று குமுறிக் கொதித்தாள் சாந்தா.

பரமசிவம் வீட்டில் அடி எடுத்து வைத்த உடனேயே சாந்தா சீறிப் பாய்ந்தாள். 'உங்க அருமை ஆசை நாயகி வீடு தேடியே வந்து விட்டாளே? அவளை வரவேற்க நீங்க வீட்டோடு இருந்திருக்க வேண்டாமோ? அவள் ரொம்ப நேரம் காத்திருந்தாளே. பாவம், ஏமாற்றத்தோடு போனாள். அவள்