பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220 வல்லிக்கண்ணன் கதைகள்

'சென்னை, பாம்பே, கல்கட்டா, செவிட்டிலே ரெண்டு கொடுக்கட்டா என்று தொபுக்கடீர் என்று குதித்து நீச்சலடிப்பான்.

இன்னொரு பையன்,

'மெட்ராஸ், பாம்பே, கல்கட்டா மேலே விழுந்து கடிக்கட்டா'

என்று கூவியபடி டமாலெனத் தண்ணீரில் குதிப்பான்.

எல்லோரையும் மிஞ்சி விடுவான் ஒரு பெரிய பையன். நாடக மேடையில் கள்ளபார்ட்காரன் ஆடிப்பாடி அட்டகாசம் செய்கிற போது பாடும் பாட்டை அவன் உரத்த குரலில் கத்துவான்.

'கோட்டைக் கொத்தளம் மீதிலேறிக் கூசாமல் குதிப்பேன் - பலபா குதிப்பேன்...

காவலர் கண்டு புடிக்க வந்தால் கத்தியால் குத்திடுவேன்! - ஐசா கத்தியால் குத்திடுவேன்!

ஒரு நீச்சில் கப்பலை பிடிப்பேன் கல்கத்தா துறைமுகம் பார்ப்பேன்’

அவன் நீச்சலிலும் சூரப்புலிதான். நீரில் பல சாகசங்கள் செய்து காட்டுவான்.

தூர நின்று அதை எல்லாம் வேடிக்கை பார்ப்பதில் முருகனுக்கும் அவனைப் போன்ற சிறுவர்களுக்கும் ரொம்பப் பிடிக்கும். பொழுது போவதே தெரியாமல் நின்று ரசிப்பார்கள்.

ஆனால், அதெல்லாம் லீவு நாட்களில்! இன்று பள்ளிக்கூடம் உண்டு. கட்டாயம் போக வேண்டுமே! குளத்தில் 'கருவக் கோந்' தையும் மற்ற வேடிக்கைகளையும் பார்ப்பதற்கு நேரம் ஏது? மனமும் இல்லை.

முருகனின் பார்வை நெடுகிலும் மேய்ந்தது, பசுவைத் தேடி.

"அதோ அங்கே நிற்குது என்று கத்தினான் சங்கரன். முருகனும் கண்டு கொண்டான்.

இருவரும் எச்சரிக்கையாகத் தான் அதை நெருங்க முயன்றார்கள். ஆனால் அது அவர்களை விட அதிக எச்சரிக்கை உணர்வோடு நின்றது. தன்னைப் பிடிக்கத் தான் பையன்கள் வருகிறார்கள் என்று அது புரிந்துகொண்டது. உடனே எடுத்தது ஒட்டம். ரஸ்தாவில் ஏறி கிழக்கு நோக்கி ஓடியது.

'அவுத்து விட்டதாம் கழுதை எடுத்து விட்டதாம் ஒட்டம்கிற மாதிரியில்லா ஓடுது!’ என்று வேடிக்கையாகச் சொன்னான் சங்கர்.