பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சின்னவன் 221

முருகன் அதை ரசிக்கும் நிலையில் இல்லை. சவம் கல்வெட்டாங்குழிக்குத் தான் போகும் என்று முனகினான்.

அது அரைமைல் தூரத்துக்கும் அப்பால் இருந்தது, வெம்பரப்பும் வெட்ட வெளியும்தான். புல் நீளம் நீளமாக வளர்ந்து நிற்கும். அங்கங்கே பெரிய பெரிய கற்குழிகள் காணப்படும். எப்பவோ வெடிவைத்துத் தோண்டி, பாறாங் கற்களை பெயர்த்து எடுத்திருந்தார்கள். அதன் மிச்சங்களாக அக்குழிகள் விளங்கின. 'கல்வெட்டாங்குழிகள்' என்று பிரசித்தி பெற்றிருந்த அவற்றில் எப்பவும் தண்ணீர் கிடக்கும். எப்பவாவது யாராவது அதில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதும் நடக்கும். அவற்றின் மீது பயப்படுத்தும் கதைகள் கட்டப்பட்டு உலவின. அதனால் சிறுவர்கள் அங்கே போக அஞ்சுவார்கள்.

ஆனாலும் முருகனும் நண்பர்களும் சில சமயம் துணிந்து அந்தப் பக்கம் வருவது உண்டு. உபயோக மற்றுப் போன சைக்கிள் சக்கரம், ரப்பர் வளையம் போன்றவற்றை கம்பியால் அடித்து உருட்டிக் கொண்டு விளையாட்டாக வருவார்கள். ஜாலியாக இருக்கும்.

ஆயினும், ஒடிய பசுவைத் தேடிக்கொண்டு அங்கே வருவது முருகனுக்குப் பிடிக்காத காரியம் தான். என்ன செய்வது? அவ்வப்போது, மனசுக்குப் பிடிக்காத காரியத்தையும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறதே!

இப்பவும் அதே தான் நடந்தது.

வேகமாக ஓடிய மாடு அங்கே ஒரு இடத்தில் ஒய்வாகப் படுத்திருந்தது.

முருகனும் சங்கரனும் ஒவ்வொரு பக்கமாக அதை நெருங்கினார்கள். பசு மிரண்டு எழுந்திருக்கவில்லை. ஒட்டம் அதுக்கே அலுத்துப்போச்சோ என்னவோ!

சங்கரன் அதன் தும்பைப் பற்றினான். முருகன் அதை லேசாகத் தட்டித் கொடுத்தான்.

பசு சாதுவாக எழுந்து நின்றது. அவர்களோடு செல்ல இசைந்தது. நடந்தது.

'இது நல்ல பசுதான். ஆனா சில சமயம்தான் இதுக்கு ஏதோ வெறி வந்திருது. ஒட்டப் பிசாசு இதைப் பிடிச்சிருக்குமோ என்னவோ. பிய்ச்சுக்கிட்டு ஒட ஆரம்பிச்சிருது!' என்று முருகன் சொன்னான். -

சங்கரன் ரசித்துச் சிரித்தான்.