பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222 வல்லிக்கண்ணன் கதைகள்

'அய்யா இதை வாய்க்காலிலே குளிப்பாட்டி வருவாகளே! அப்பல்லாம் எவ்வளவு அமெரிக்கையாக நடந்து வரும். ஒட்டப் பேய் பிடிக்கிற போதுதான் நம்மைப் பாடாய்ப் படுத்து' என்றான்.

வாரம் ஒரு தடவை அண்ணாச்சி பசுவை குளிப்பாட்ட வாயக்காலுக்கு இட்டுச் செல்வார். முருகன் கன்றுக்குட்டியைப் பிடித்து இழுத்துச் செல்வான். சிலசமயம் அதுவே அவனை இழுத்துக் கொண்டு ஒடும. அழகான கன்றுக்குட்டி.

சாதுவான பிராணிதான். குளிப்பாட்டி முடித்துக் கரையேறியதும், அதை பிடித்துக் கொண்டுவர வேண்டும் என்கிற அவசியமில்லை. கன்றுக்குட்டியை முன்னாலேயே நடக்க விட்டு வந்தால், பசு தானாகவே பின்தொடரும், அண்ணாச்சி அப்படித்தான் செய்வார்.

பசு வீடு வந்து சேர்ந்தது. அண்ணாச்சி ஆவலாக அதைப் பிடித்து, தொழுவத்துக்கு இட்டுச் சென்றார்.

முருகன் கடியாரத்தைப் பார்த்தான். மணி 9.45. என்னதான் லேகமாக ஒடினாலும், பள்ளிக்கூடம் சேரும் போது முதல் பீரியட் ஆரம்பமாகியிருக்கும்.

முதல் பீரியட் கணக்கு. வாத்தியார் வயித்திலிங்கம். கண்டிப்பானவர். ஐந்து நிமிடம் வேட்டாகப் போனாலும், பீரியட் பூராவும் வெளியிலே நிற்கச் செய்வார் அல்லது பெஞ்சு மேலே ஏறி நிற்கும்படி செய்வார். அவர் முகசவரம் செய்து கொண்டு வந்திருந்தால், அநியாயத்துக்கு கோபிப்பார். 'நிமிட்டாம் பழம்' என்று சொல்லி, அழுத்தமாகச் கிள்ளுவார். நாள் முழுதும் அந்த இடத்தில் எரிச்சல் இருக்கும். இன்னிக்கு அவர் சவரம் செய்து கொள்ளாத நாளாக இருக்கணும், சாமி கடவுளே!

முருகன் உள்ளம் குமைந்தது. 'வயித்திலிங்கம் வாத்தியார் சாகாரா, எங்கள் வயித்தெரிச்சல் தீராதா!' என்று பையன்கள் பாடுவார்கள். அவன் மனமும் இப்போது அதை எதிரொலிபோல் முனகியது.

சின்னப் பையனாக இருப்பது ரொம்பமோசமான விஷயம் என்று எண்ணினான் முருகன். வீட்டிலே பெரியவர்கள் திட்டுகிறார்கள். பள்ளிக்கூடத்தில் வாத்தியார்கள் தண்டிக்கிறார்கள். எழுதுவதற்கும் படிப்பதற்கும் ஏகப்பட்ட பாடங்கள் சுமத்துகிறார்கள். வேலைக்குப் போனால் முதலாளிகள் என்று பெரியவர்கள் சிறுவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள். கடவுளே, ஒரு வீட்டில் சின்னவனாக இருப்பதே பெரிய தண்டனைதான்.