பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுயம்பு 225

குழந்தையின் தலையில் பலமான அடி. மேலே இருந்த பெரியவர்கள் கீழிறங்கி வருவதற்கு முன்னதாகவே அக்கம்பக்கத்தினர் கூடி விட்டனர். ரத்தம் குழந்தையின் ஆடையை நனைத்துப் பளிச்சிட்டது... .

'அய்யோ பாவம்' என்றது சுயம்பு மனசு. இப்படி நடக்கும்னு எனக்கு ஏனோ தோணியிருக்கு என்று எண்ணினான் அவன். உள்ளுணர்வின் திடுக்கிடலாக இருக்கலாம் என்றும் நினைத்தான். அப்படியே நடந்துவிட்டது என்று கூறியது அவன் மனம். கவிதைத் துணுக்காய் சிலிர்த்துச் சிரித்த சிறு பெண் கோரச் சித்திரமாய் ஒரு கணத்தில் மாற நேரிட்டது அவனுள் ஒரு வேதனையை உண்டாக்கியது. அது தான் அவனுக்கப் பெரும் உறுத்தலாக இருந்தது. வேறு எதுவும் எண்ண வில்லை அவன்.

திரும்பவும் இந்த உள்ளுணர்வு அவனை திடுக்கிட வைத்தது வேறொரு நாளில்

தெரிந்தவர் ஒருவர் வீட்டின் முன்னறை. நண்பன் ஒருவனுடன் வந்திருந்தான் சுயம்பு. பலர் இருந்தனர், நாற்காலிகளில்... சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருந்தனர். சுயம்பு, சும்மா அங்கும் இங்கும் பார்த்தபடி இருந்தான். உயரே மின் விசிறிவேகமாக சுற்றிக் கொண்டிருந்தது.

அவன், அதை கவனித்தவாற இருந்தான். திடீரென அவனுள் ஒரு பரபரப்பு, அந்த விசிறி அறுந்து கீழே விழுந்துவிட்டது. அதற்கு கீழே இருந்தவர் தலை மீது விழுந்தது, அவர் சரிந்து விழுகிறார். மண்டையில் அடிபட்ட அவர் செத்துப் போகிறார். 'அய்யோ’ என்றது சுயம்புவின் வாய். தலையை உலுக்கிக் கொண்டு அவன் பார்த்தான். அப்படி எதுவும் நடந்திருக்க வில்லை.

மற்றவர்கள் அவனை ஒரு மாதிரி பார்த்தனர். 'என்ன, உனக்கு உடம்புக்கு குணமில்லையா?' என்று நண்பன் கேட்டான். 'திடீர்னு அய்யோன்னுகத்தினியே?’ என்றான். சுயம்பு திகைத்தான். என்ன சொல்வது? எப்படி விளக்குவது? 'ஒண்னுமில்லே!' என்று அசடன் போல் முனகினான்.

அவனும், நண்பனும் புறப்படத் தயாராயினர். அப்போது தான் அது நிகழ்ந்தது. மேலே சுழன்று கொண்டிருந்த மின் விசிறி திடுமென அறுந்து விழ, அது கீழே இருந்தவரின் தலையைத் தாக்க, அவர் சரிந்து கீழே விழுந்தார். சரியான அடி. ஆள் குளோஸ்!

சுயம்பு அதிர்ந்து போனான். அவன் உள்ளத்தில் பெரும் உறுத்தல். இவரை நான் காப்பாற்றியிருக்க முடியுமோ?