பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுயம்பு 227

அவனுள் எழுவது உண்டு. அதற்காக அவன் மன வேதனை கொள்ளவில்லை.

இந்நிலையில் சுயம்புவுக்கு ஒரு காட்சி புலனாயிற்று. ஆனந்தமயமான சூழலில் அமைந்த மகிழ்ச்சிகர நிகழ்ச்சியாகவே தோன்றியது அது.

அவன் நண்பனுக்குத் திருமணம். கல்யாண மண்டபக் காட்சிகள் வர்ணமயமாக குளுகுளுத்தன. எங்கும் சந்தோஷம். இனிமைகள். முகூர்த்த நேரம் நெருங்குகிறது. ஒரே பரபரப்பு.

இவை எல்லாம் சுயம்புவுக்கு மகிழ்ச்சி தருவதாகவே அமைந்தன. சட்டென நிலைமை மாறியது. ஒருவர் வந்து மணமகனிடம் ரகசியமாக ஏதோ சொல்கிறார். அவன் முகம் வெளிறுகிறது. செய்தி மெதுவாகப் பரவ, உண்மை வெளிப்படுகிறது. மணமகளை காணவில்லை. யாரிடமும் சொல்லாமல் எங்கோ போய்விட்டாள். தன் மனசுக்குப் பிடித்த காதலனுடன் ஒடிப்போயிருக்க வேண்டும்.

இக்காட்சி சுயம்புவை உலுக்கியது. உண்மையாகவே அவன் நண்பனுக்கு திருமணம் நிகழ இருந்தது. இப்போது தன்னுடைய கடமை என்ன? நண்பனுக்கு கடைசி நேர ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்படாமல் தடுத்துவிடலாம். ஆனால், தான் சொல்வதை மணமகனும், மற்றவர்களும் நம்புவார்களா? எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வார்களா? அல்லது, எச்சரிக்க முற்பட்ட அவனையே பழித்து, பரிகசித்து, குறை கூறி, அவமதிப்பார்களா? அவன் குழம்பினான்.

உண்மையில், பிந்தியதைத்தான் அவர்கள் செய்வார்கள்; அதுதான் மனித இயல்பு என அறிவுறுத்தியது அவன் உள்ளம். நடப்பது நடந்தே தீரும் என்று எண்ணினான் சுயம்பு.

அவனது அதீத உணர்வில் புலனானது நிஜ நிகழ்ச்சியாக நடந்து முடிந்தது. சுயம்பு அதற்காக மகிழ்ச்சி அடையவில்லை.

(தினமலர்'97)



பெருமை


ருவனுக்கு அதிர்ஷ்டம் இந்தால் அவன் கரியைத் தொட்டாலும் அது மஞ்சள் ஆகிவிடும் என்று சொல்வார்கள். பணம், பொருள் விஷயத்தில் மட்டுமின்றி புகழும் பெருமையும் வந்து சேருவதில் கூட அதிர்ஷ்டம் துணைபுரியக்கூடும்