பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230 வல்லிக்கண்ணன் கதைகள்

தென்படவில்லை அன்று பூராவும் மப்பும் மந்தாரமுமாக இருந்து, அந்திவேளையில் மேக மூடாக்கு கனத்து, கவிந்து வந்து இருட்டுக்கு மேலும் அழுத்தம் கொடுத்தது. குளிர்ந்த வாடைக் காற்று நிலவியது. மழை இல்லை. மழை. வரலாமோ என்ற எண்ணத்தை உண்டாக்கும் சூழ்நிலை.

மகிழ்வண்ணம்பிள்ளை தற்செயலாக வெளியே வந்தார். எப்போது இரவில் அவர் வெளியே தலைகாட்டினாலும், கையில் ரிவால்வர் எடுத்து கொள்வது தான் வழக்கம். அன்றும் அது இருந்தது.

என்றுமே புன்னைக்காடு ஏழு மணிக்குள் ஒய்ந்து அடங்கி விடும். தெருக்களில் நடமாட்டம் இராது என்பது மட்டுமல்ல, அந்த ஊரில் வீடுகளில் ஆட்கள் வசிக்கிறார்களா இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு ஊரே அமைதிப் போர்வையை மூடிக் கொண்டு உறங்கித் தோன்றும்.

அதிலும், தொடர்ந்து எலெக்ட்ரிக் விளக்குகள் எரியாது கெடுத்து விட்ட நாட்களில் மூன்றாவது நாளான அன்று, ஊரில் எங்குமே ஒரு பொட்டு வெளிச்சம் கூட இல்லை.

வாசல் 'கேட்' நன்றாகச் சாத்தி கொண்டி போடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கும் நோக்கத்தோடு மகிழ்வண்ணம்பிள்ளை திண்ணையை விட்டுக் கீழே இறங்கக் கால் எடுத்து வைத்தார். அவரிடம் அப்போது 'டார்ச் இல்லை.

தெருவாசல் கேட்டை ஒட்டிய குத்துச் செடிகளின் அருகே ஏதோ ஒரு பிராணி அசைவதை அவர் கண்கள் புரிந்து கொண்டன 'யாரது?’ என்று கத்தினார் பிள்ளை. திருட்டுப்பயல் எவனோ தான் என்ற எண்ணமே அவருக்கு முதலில் ஏற்பட்டது. 'யாருடா அவன்?’ என்று மீண்டும் உரக்கக் கூவினார்.

பதில் இல்லை. ஆனால் ஒரு செடியிலிருந்து மறுசெடிக்கு அது நகர்ந்ததனால் உண்டான சலசலப்பு கேட்டது. ஏதோ பிராணி நடப்பது போலவும் பட்டது. நாயா, பன்றியா அல்லது வேறு எதுவுமா என்று அவருக்குப் புரியவில்லை.

அவருள் எழுந்த ஒரு அச்சம் 'எதாக இருந்தாலும் இருக்கட்டுமே சுட்டுவைப்போமே' என்று உந்துதல் கொடுத்தது. தன்னைகாத்துக் கொள்ளும் ஒரு உதைப்பும் சேர்ந்தது. அவர் தயங்கவில்லை சுட்டுவிட்டார்.

அடிபட்ட பிராணி வேதனையோடு உறுமியது. அந்த உறுமல் கோரமாய் ஒலித்தது. ரத்தத்தை உறைய வைக்கும் பயங்கரக் கூச்சலில் மரண வேதனையும் கலந்திருந்தது.