பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234 வல்லிக்கண்ணன் கதைகள்

ஆனால், பரிபூரண ஆனந்தன் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டான். அன்றைய அலுவலைப் பூரணமாக முடித்த பின்னரே புறப்படுவான். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தாமதமானாலும் பரவாயில்லே; எடுத்த வேலையை பெர்பெக்ட் ஆகச் செய்த முடிக்க வேணும் என்பான். மற்றவர்களும் அவ்விதம் செய்ய வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், மற்றவர்கள் அப்படிச் செய்ய முன்வரவில்லை. அவனை அப்பாவி, 'பைத்தியாரன்' (பைத்தியக்காரன்) என்றும் கருதினார்கள்.

'இப்ப இப்படித்தான் இருப்பாரு. கல்யாணம் ஆகி விட்டால் இவரும் வழிக்கு வந்துவிடுவாரு. இவருடைய சுத்தம் - ஒழுங்கு - பூரணம் - பெர்பெக்ட்தனம் எல்லாம் வீட்டுக்கு வந்து சேருகிற அம்மாளிடம் பலிக்குமா என்ன? பெண்கள் பெரும்பாலும் அவரவர் இஷ்டம் போல் மெத்தனமா, சோம்பேறித்தனமாக, பெர்பெக்ட்தன்மை எல்லாம் பார்க்காமல் தான் காரியங்கள் பண்றாங்க பரிபூரண ஆனந்தனுக்கு ஒருபரிபூரண ஆனந்தியா வரப் போறா! பார்ப்போமே!’ என்று நண்பர்கள் கிண்டல் செய்வதும் சகஜமாகி விட்டது.

அது அவனை யோசிக்க வைத்தது. கவனிக்கும் படி செய்தது. பெண்களின் போக்குகளை, இயல்புகளை, செயல் திறன்களை, பேச்சுகளை ஸ்டடி பண்ணும் படி தூண்டியது. இறுதியாக ஒரு முடிவுக்கு வரும் படி பண்ணியது.

'நமக்கு ஒத்து வரக்கூடிய பெண் கிடைக்க மாட்டாள். நம்மை அவள் வழிக்கு இழுத்துவிடக் கூடியவளாக பெண் இருப்பாள். நம்முடைய பிரின்சிபிள், கொள்கை, சுபாவம் எல்லாம் எவளோ ஒருத்தியினால் மிதிபட்டு, நம்மிடமிருந்து அகற்றப்பட்டு... சேச்சே, அது சரிப்படாது. ஆகவே நமக்கு நமது பூரண ஆனந்த வாழ்க்கைத் துணை அவசியம் இல்லை. துணைவி இல்லாமலே நம்முடைய வாழ்க்கை பெர்பெக்ட் ஆக இயங்கும்.'

அவனுடைய சிந்தனை காட்டிய வழி இது. அதன் படியே நடந்தான் அவன். அதற்காக அவன் வருத்தப்பட நேர்ந்ததுமில்லை.

அதிகாலையில் நாலரை மணிக்கு எழுந்தான். ஒன்றரை அல்லது இரண்டு மைல் தூரம் உலா போனான். குளிர்ந்த நீரில் குளித்தான். ஒரு அம்மாள் பதிவாகச் சில பேருக்கு சமைத்துப் போட்டு வாழ்க்கை நடத்திய தனிச் சாப்பாட்டு விடுதியில் நேரம் தவறாது சாப்பிட்டான். வேலைகளை ஒழுங்காகக் கவனித்தான். ஒய்வு நேரங்களில் பத்திரிகைகள், புத்தகங்கள் படித்தான். சில