பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முளையும் - விளைவும் 241

'பெரிய ஸினிக் ஆக இருக்கான் பையன். பாவம், வாழ்க்கை இவனை ரொம்பவும் சோதிக்குதுபோல் தெரியுது' என்று அவர் மனம் பேசியது.

'ஸார்வாளுக்கு நல்லா ஞாபகம் இருக்கும். கனகசபை வாத்தியார் கிட்டே ட்யூஷன் படிச்சுக்கிட்டிருந்தவங்களிலே சிவகாமின்னு ஒரு புள்ளே இருந்தது. அழகா, சிவப்பா. அதோட பத்தாவது வயசிலே நீங்க பார்த்தீங்க. பிறகு ரொம்ப அற்புதமா வளர்ந்து நின்னுது. நீங்க கூடச் சொல்லியிருந்தீங்க இந்தப் புள்ளை முகத்திலே லட்சுமிகளை கொஞசி விளையாடுது. இது ராஜரீகமா வாழப்போகுது. பெரிய இடத்திலே மருமகளாகப் போய், ராணி மாதிரி இருக்கும் இன்னிங்க. அந்தப் புள்ளைக்கு கல்யாணமாக ரொம்பக் கஷ்டப்பட்டுது, அழகை யாரு பார்த்தாங்க? நகை பல ஆயிரம், ரொக்கமாச் சில ஆயிரம் வேணுமின்னு எல்லா இடத்திலும் கேட்டாங்க. பதினேழாவது வயசிலே கல்யாணமாச்சு. அவ்வளவா வசதி இல்லாத குடும்பம். மாமியார் ரொம்பக் கஷ்டப்படுத்தினா, புருசன் அதுக்கு மேலே, சந்தேகப் பேர்வழி. அழகான பொண்ணு, எவன் எவன் மேலேயோ ஆசைப்பட்டு கண்டபடி அலைவான்னு அவனுக்கு நெனைப்பு. அவன் கரடி மாதிரி இருப்பான். அதனாலே அவளை அடிஅடியின்னு அடிப்பான். அவ குழந்தை உண்டாகியிருந்த சமயம் அவன் எட்டி உதைச்சு, பேயறை அறைய, அவள் இசை கேடாக விழுந்து படுத்த படுக்கையாகி செத்தே போனாள். அவள் அழகாக இருந்து லட்சுமிபோலே விளங்கி, நல்லவளாக வாழமுயன்று என்னத்தைக் கண்டாள்? வாழ்க்கை எப்படி எப்படியோ இருக்குது. நம்ம சமூக நிலைமைகள் மகா மோசம்...'

அவனுக்கு அன்று மனப்புழுக்கம் போலும். பெரியவர் அன்பாகவும் அனுதாபமாகவும் பேசத் தொடங்கவும் அவன் சொல்மழை கொட்டித் தீர்த்தான். ஒரு பஸ் வந்ததும் ஏறிக்கொண்டு பறந்தான்.

ஞானப்பிரகாசம் பெருமூச்செறிந்தார். 'இரண்டாவது தோல்வி' என்று பழைய குறிப்பில் பதிந்து கொண்டார். 'பத்துக்கு ரெண்டு அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அதுக்காக எல்லாமே பொய்த்துப் போகும்னு எப்படிச் சொல்ல முடியும்?' என்று அவர் மனம் வாதிட்டது. இதை நிச்சயம் செய்து கொள்வதற்காகவாவது அந்த ஊருக்குப் போயாக வேண்டும் என்று அவர் விரும்பினார்.

அந்த விருப்பம் செயலாக முடிவதற்கு அவருக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது. 'பரவால்லே. நாம் சொன்னதுபோல,