பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முளையும் - விளைவும் 243

இல்லை. சப்ரிஜிஸ்ட்ரார் ஆபீசிலே கிளார்க் ஆகும் வாய்ப்புதான் அவனுக்குக் கிடைத்தது. ஈயடிச்சான் காப்பி என்பாகளே, அது மாதிரி, இயந்திர ரீதியாகப் பார்த்து எழுதிக்கிட்டே இருக்கிற வேலை. அவன் மூளையும் ஆற்றலும் துருப்பிடிச்சு, எதுக்கும் உதவாமல் போயிருக்கும். நாம் எவ்வளவோ ஆசைப்படுகிறோம். இளம் தலைமுறையினரிடம் எவ்வளவோ எதிர்பார்க்கிறோம். நம்பிக்கையோடு இப்படி எல்லாம் நடக்கும் என்று உறுதியாகச் சொல்கிறோம். ஆனால் அவை நடப்பது இல்லை. ஏறுமாறாக நடந்து விடுது. அதுக்கெல்லாம் காரணம், தனிப்பட்ட அந்த இளைஞர்களின் போக்குகளோ பண்புகளோ அல்ல. குடும்பங்களின் பொருளாதார நிலை, சமூகநிலை, நாட்டு நிலை முதலியனதான் முக்கிய காரணங்கள்.'

நாம் அதிகம் பேசிவிட்டோம் என உணர்ந்தவர் போல், கனகசபை சடக்கென்று பேசை நிறுத்தினார். மெளனத்தில் ஆழ்ந்து விட்டார்.

அவர் பேச்சில் உண்மை இருப்பதை ஞானப்பிரகாசம் உணர்ந்தார். அப்படித்தானே ஆச்சு! அவர் எண்ணி, எதிர் பார்த்து, உறுதியாக அறிவித்தது என்ன? பன்னிரண்டு வருட காலத்தில் நிகழ்ந்திருப்பதுதான் என்ன? இத்தகைய விளைவுகளை அவர் எதிர்ப்பார்க்கவே இல்லையே! நடராஜனையும், சிவகாமியையும் வாழ்க்கை வஞ்சித்திருந்தது போலவே, அவர் பட்டியலில் குறித்து வைத்திருந்த இதரர்களில் பலபேரையும் வஞ்சித்து விட்டது. ஒரு சிலர் வேறு விதத்தில் முன்னேறியிருந்தார்கள்! அதையும் அவர் முன்கூட்டியே கணிக்க முடிந்தது இல்லை தான்.

'உள்ளதைத் தின்னு போட்டு ஊரைச் சுத்திக்கிட்டு இருப்பான்’ என்று அவரால் மதிப்பிடப்பட்ட பெரிய வீட்டுப் பையன் ஒருவன், பணபலத்தால் என்ஜினிங் காலேஜில் இடம் பெற்று, வருடங்களைக் கழித்து, பட்டமும் பெற்று விட்டான்: ஆனால் வேலை கிடைக்கவில்லை. சுமாராகக் கல்வி கற்று, வீட்டில் இருந்தபடி விவசாயத்தை கவனிக்கிறேன் என்று சோம்பல் வாழ்வு வாழ்வான் என்று குறிப்பிடப்பட்ட, மத்தியதர வர்க்கத்துப் பையன் ஒருவன், எட்டாவது வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு அவனுக்கு வேண்டிய ஒருவரோடு பிசினஸில் ஈடுபட்டு, இருவரும் சேர்ந்து சுரண்டி, சொந்தமாக பிசினஸ் ஆரம்பித்து, லாபகரமாக முன்னேறி கொண்டிருந்தான். சுமாராக இருப்பான், சுத்த மண்டு என்று கருதப்பட்ட ஒருவன் குடித்து, சூதாடுவதிலும் சிறு திருட்டுகளில் வெற்றி காண்பதிலும் பிரசித்தி பெற்றுவிட்டான். குடியும் குடித்தனமுமாய் இருப்பாள் என்று