பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் அதிர்ச்சி 245

கவனித்துக் கொண்டு தானிருந்தன. அவளிடம் தனியான ஒரு தன்மை இருப்பதாக அவன் உள்ளம் உணர்ந்தது.

அவளுக்கு இருபதுக்கு மேல் முப்பதுக்குள் எந்த வயசும் இருக்கலாம். ஒல்லியாகத்தான் தோன்றினாள். கன்னம் ஒட்டி, தோள் எலும்புகள் துருத்திக் கொண்டு...

'நாகரிக யுகத்திலே பெரும் பாலான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். உருளைக் கிழங்கு போண்டா மாதிரியும், ஆப்பிள் பழம் போலவும், பருமனாய் சதைப் பிடிப்பும் மினுமினுப்புமாகச் சில பேர்தான் காணப்படுகிறார்கள். பாஷனும் பகட்டான டிரஸூம், ஸ்டைலான சிங்காரிப்பும்தான் அநேக பெண்களுக்கு வனப்பும் வசீகரமும் தருகின்றன. இப்படி அவன் மனம் எண்ண அலை நெளிய விட்டது. இயந்திரத்தை இயக்கும் ஒரு கருவிபோல் இருந்தாலும் சந்திரன் உணர்வற்ற மிஷின் அல்ல.

அவள் கண்களை உறுத்தும்படியாக மேக்கப் செய்து கொண்டிருக்கவில்லை. பளிச்சென வர்ண ஒளிகளை வீசும் ஆடைகளைத் தேர்ந்து அணிந்திருக்கவுமில்லை. இருந்தாலும், அவளிடம் என்னவோ ஒரு கவர்ச்சி இருந்தது. அவளை ஒரு மலர் என்று சொல்லலாமென்றால், 'நெஞ்சில் கனல் எழுப்பும் மலர்' என்று உவமிக்க முடியாது. இனிமையும் குளுமையும் அமைதியும் புகட்டுகிற பூக்களோடும் அவளை ஒப்பிட இயலாது. இனம் புரிந்து கொள்ள முடியாத வருத்தத்தை - சோகத்தை - உள்ளத்தில் அரும்பச் செய்கிற தனிரக மலர் மாதிரத் தான் அந்தப் பெண்ணும் இருந்தாள்.

சந்திரன் கார் ஒட்டும் தொழிலை மேற்கொண்டிருந்தாலும், கவிதைகளை ரசிக்கக் கற்றவன். அவன் உள்ளம் வரண்டது அல்ல.

அந்தப் பெண்ணின் கண்கள் அப்படியும் இப்படியும் பரண்டு கொண்டுதான் இருந்தன. குறுகுறுப்பும் இளமைத் துடிப்பும் இயல்பாகவே குடிகொண்டிருந்த அகன்ற கரிய விழிகளில் ஆழம்காண முடியாத நீர்நிலையின் அமைதியும், காரணம் தெரிந்து கொள்ள முடியாத வேதனையும் கலந்து கிடப்பதாக அவனுக்குத் தோன்றியது.

சந்திரன் நேர்மையானவன். கடமையில் கருத்து உடையவன். ஒழுங்கு தவறாதவன். தான் உண்டு. தன் தொழில் உண்டு என வாழ்கிறவன். தொழில் சம்பந்தமாக அவன் தினந்தோறும் எத்தனையோ ரக மனிதர்களோடு பழகவேண்டியிருந்தது. காரினுள் அவன் முதுக்குப் பின்னே, ரகசியம் என்ற நினைப்பில்