பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250 வல்லிக்கண்ணன் கதைகள்

இரண்டு மூன்று பெண்களுடனோ. பஸ் நிற்குமிடத்தில், பார்க்கில், ஒட்டலில், சினிமாத் தியேட்டரில்... முன்பு அவளை எங்கெங்கு காண முடியும் என்று அவன் எண்ணினானோ, எங்கெங்கு எல்லாம் அவளைத் தேடினானோ. அங்கெல்லாம் இப்போது அவள் தென்படுவது சகஜமாயிற்று. ஆனால் 'வேளை கெட்ட வேளைகளில்' அவள் காட்சி தந்தாள்.

ஓர் இரவில், 'மனசு சரியாக இல்லை' என்ற காரணத்துக்காக - எல்லோரும் ரொம்ப அருமையான படம் என்று பாராட்டிப் பேசி, அவன் அவசியம் பார்க்க வேண்டும் என்று சிபாரிசு செய்ததனாலும் - சந்திரன் ஒரு படத்துக்குப் போயிருந்தான், ஒன்பதரை மணிக் காட்சிக்கு. அப்போதுதான் அவனுக்கு நேரம் கிடைத்தது.

அந்தப் படத்தைப் பார்க்க, அதே காட்சிக்கு, ஜோடிகள் பலர் வந்தார்கள். தனித்தனியாகவும், இரண்டு மூன்று பேராகவும், பெண்கள் அதிகமாகவே வந்தார்கள்.

'பெண்கள் மாட்டினி அல்லது மாலைக் காட்சிக்கு வந்து போனால் என்ன? இரவுக் காட்சிக்கு வருவானேன்? படம் முடிந்து, இரவு ஒரு மணி ஒன்றரை மணிக்கு வீட்டுக்கு நடந்து போவது அசெளகரியமாகவும் பயமாகவும் இருக்குமே!’ என்று சந்திரன் எண்ணினான்.

அதே வேளையில், அவனுக்கு முன்னே, அவன் பார்வையை உறுத்தும் விதத்தில், ரயில் வண்டித் தொடர் மாதிரி ஒருவர் பின் ஒருவராய் ஐந்து பெண்கள் வந்தார்கள். கண்ணுக்கு விருந்தாகும் வண்ண வண்ண ஆடைகளுடன், பகட்டும் பளபளப்புமாக, ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு ரகம். கதம்பத்தின் தனித்தனி மலர் வகை மாதிரி. அவ்வரிசையில் கடைசியாக அவள் வந்தாள். இந்திராதான் வந்தாள்.

'அட, இவள்கூட இந்தக் காட்சிக்குத்தானா வருகிறாள்?' என்று அதிசயித்தவாறு அவளை நோக்கிய சந்திரனின் கண்களை அவளுடைய மை பூசிய கருவிழிகள் தொட்டன. அவள் சிரித்தாள். அவனோடு பேச விரும்புகிறவள்போல - பேசி விடுவாள் போல - பார்த்தபடியே நடந்தாள். கூட வருகிற பெண்கள் இல்லாவிட்டால் அவள் நின்று பேசுவாள்' என்றே அவனுக்குப் பட்டது.

இன்னொரு நாள், நகரின் ஒரு ஒதுக்குப் புறத்தில், ஜன நெருக்கம் மிகுந்த ஒட்டல் ஒன்றில் காப்பி சாப்பிட்டு விட்டு சந்திரன் வெளியே வந்துகொண்டிருந்த போது, அவள் எதிரே வந்தாள். வயதும் கனமும் அதிகமான அம்மாள் ஒருத்தியுடன்.