பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252 வல்லிக்கண்ணன் கதைகள்

அவன் மனம் ஏசுவதில் இன்பம் கண்டது. வேதனை குடைந்து கொண்டே இருந்தது. வெகு நேரம் வரை. இரவில்கூட. துக்கம் வரவே மறுத்தது.

அவள் நல்லவளாக இருப்பாள் என்று நான் நினைத்தேன். ஏமாற்றுக்காரி... அவள் அப்படி நினைக்க வேண்டும் என்று நடந்து கொண்டாளா? நடித்தாளா? இல்லையே. பின்னே, அவள் ஏமாற்றினாள் என்று எப்படிச் சொல்லலாம்?... யாரோடு அவள் எப்படிப் பழகினால் எனக்கு என்ன? ஏன் இந்த மனக் கஷ்டம்?

குழம்பி அலைமோதிய அவன் உள்ளத்திலே இந்த எண்ணம் எழவும், அவனுக்கு உண்மை உறுத்தியது. இந்திரா மீது அவனுக்கு விசேஷமான ஆசை. காதல்? ஆமாம். அதேதான். அதனால்தான் அவளைப் பற்றியே அவன் அதிகம் எண்ணி வந்தான். அந்நினைவுகள் அவனுக்கு இனிமையாயின.

அதனாலேயே அவன் அவளை அடிக்கடி காணவேண்டும் எனத் தவித்தான். காண நேர்ந்தபோது மகிழ்ச்சியும், காண முடியாதிருந்த காலங்களில் ஏக்கமும் வருத்தமும் அனுபவித்தான். அவளோடுபேசிப் பழகி, இன்பமாகப் பொழுது போக்க வேண்டும் என்றும், அவளை மணந்து கொண்டு எதிர் காலத்தை ஆனந்த மயமானதாக மாற்ற வேண்டும் என்றும் ஆசை வளர்ந்து, கனவுகள் கண்டு, கோட்டை கட்டுகிற அளவுக்க அவனுடைய காதல் முற்றிவிட வில்லை என்பது உண்மைதான். இப்பொழுதுதான் துளிர் விட்டுச் சிறு கொடி வீசி ஆடிக் கொண்டிருந்தது. நன்கு பற்றிப் படர்ந்து பசுமையாய்த் தழைத்து, அற்புதமான மலர்கள் பூத்துக் குலுங்கி, பலன் தருவதற்குக் காலம் துணை புரிய வேண்டும். அதற்குள் சந்தேகப் பூச்சி குருத்தை அரிக்கத் தொடங்கி விட்டது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த அருமையான சந்திப்பு நிகழ்ந்தது.

டாக்சி ஸ்டாண்டில் வண்டி காத்து நிற்கையில் அவள் வந்து சேர்ந்தாள். அவன் வண்டி மட்டுமே நின்றது. மணி என்ன, பன்னிரண்டு அல்லது பன்னிரண்டரை இருக்கலாம். நல்ல வெயில். வழக்கம்போல், 'டாக்சி, வாடகைக்கு வருமா?’ என்று கேட்டபடிதான் அவள் வந்தாள். வாடிவதங்கிய புஷ்பம்போல. அலைந்த களைப்பும் இயல்பான சோர்வும் முகத்தில் குடியிருக்க, அவளே சோகசித்திரமாகத்தான் காட்சி தந்தாள் இப்போது. அவளைக் கண்டதும், 'ஓ, நீங்கள்தானா?' என்று கேட்டு, புன்னகை புரிந்தாள்.