பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256 வல்லிக்கண்ணன் கதைகள்

இரண்டு பேரும் கீழே இறங்கினார்கள். ஒல்லி நபர் மீட்டரைப் பார்த்து, பணத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பினான்.

'வாங்க, வாங்க!”

உற்சாகம் குமிழியிட மென்குரல் அழைப்பு சந்திரனைச் சுண்டி இழுத்தது. அவள்! இந்திரா!

அவளும் அவனைக் கவனித்து விட்டாள். ஆயினும் அவனைப் பாராதவள்போல், தன்னை நெருங்கிக் கொண்டிருந்த பணக்கார உல்லாசியை மகிழ்ச்சி பொங்க வரவேற்பதில் ஆர்வம் காட்டினாள்.

அந்தத் தடி ஆசாமி அவள் இடுப்பில் கை சேர்த்து இழுத்தவாறு 'இந்து, செளக்கியமா இருக்கியா?’ என்று பல்லெல்லாம் தெரிய விசாரித்தான்.

இந்திரா வந்தவனின் முகத்தையே பார்த்தபடி, மோகன முறுவல் பூத்தாள். 'ஊம்' என்று குரலை இழைய விட்டாள்.

இழையும் குரல் சந்திரனின் உள்ளத்தில் இடர் செய்தது.

தடாரென அடித்துக் கொண்டது டாக்சியின் கதவு. கோபமாக உறுமி, ஆங்காரமாய்க் கனைத்தவாறு, வேகமாய்க் சிளம்பி ஒடியது வண்டி.

சந்திரன் மூஞ்சியில், இதயத்தில், ஆசையில், கனவுகளில், யாரோ பேயறை அறைந்து விட்டது போல - எதுவோ இடிந்து அவன் மீது விழுவதுபோல் - அவன் நின்ற இடம் சரிந்து அவனோடு அதல பாதாளம் நோக்கி இறங்குவதுபோல... எப்படி எப்படியோ வந்தது அவனுக்கு. அவனது இனிய நினைவுகள், காதல் கனவுகள், ஆசைக் கோட்டைகள், ஒளி நிறைந்த எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் எல்லாம் நிலை குலைந்து தள்ளாடி விழுந்து, அவனுடைய டாக்சிக் சக்கரங்களில் அடியிலே சிக்கிச் சிதைந்து கொண்டிருந்தன.

('சுதேசமித்திரன்-1965)



ஆற்றங்கரை மோகினி


"குகூங்' - ஏதோ ஒரு பறவையின் இன்னொலிபோல் சிதறியது சிறு சிரிப்பு.

அந்தச் சூழ்நிலையில் அப்படி ஒரு சிரிப்பை மகாதேவன் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, திடுக்கிட்டுத் திரும்பி நோக்கி