பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260 வல்லிக்கண்ணன் கதைகள்

கேட்க இன்னும் கொஞ்சம் கேட்கமாட்டோமா என்ற ஆசையே எழும்.

அவன் தன்னை அறிமுகப் படுத்த வேண்டாமா? என் பெயர் மகாதேவன். ஊர் சுற்றி அழகான இடங்களைத் தரிசித்து, மகிழ்ச்சி பெற முயலுகிறேன். இது ரொம்ப அழகான இடம் என்று கேள்விப்பட்டு இங்கே வந்தேன்.”

குமிழியிட்டுக் கொப்புளிக்கும் நீரூற்றுப் போல் சிரிப்பு அவள் வாயிலிருந்து பொங்கிப் புரண்டது. "மலை மகாதேவனைத் தேடி வராது; மகாதேவன் தான் மலையைத் தேடிப்போக வேண்டும் என்பார்கள். அழகான இந்த இடம் மகாதேவனைத் தேடி வராது என்பதனால், இந்த மகாதேவன் அழகான இந்த இடத்தைத் தேடி வந்து விட்டார்"

இதைச் சொல்லிவிட்டு அவள் கைகொட்டி, கலகலவெனச் சிரித்தாள்.

இவள் என்ன இப்படி நடந்து கொள்கிறாள் என்று குறிப்பதுபோல் அவன் அவளை நோக்கினான். விஷ நோக்கு எதுவுமற்ற விஷமக்காரச் சிறுமிபோல்தான் அவள் காணப்பட்டாள். "இதுவும் ஒரு கேரக்டர்" என்று அவன் மதிப் \பிட்டான்.

பொதுவாக, பெண்களால் சும்மா வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது. ஒயாது சளசளவென்று எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பேச வேண்டுமே என்பதற்காக சதா உளறிக் கொட்டுவார்கள். இந்த ராஜத்தின் போக்கும் அப்படிப்பட்டது தான் - இவ்விதமாகவும் எண்ணினான் அவன்.

இரண்டுபேரும் படகில் ஏறினார்கள். பெரிய வட்ட வடிவ மூங்கில் கூடை மாதிரி இருந்தது அந்தப் படகு, வயதிலும் உழைப்பிலும் முதிர்ச்சிபெற்ற, வாழ்வினாலும் வறுமையினாலும் கசப்பு வளர்த்து, பேசாத இயந்திரம்போல் ஆகிவிட்ட ஒரு மனிதன்தான் படகோட்டி. அந்தப் படகில் அவ்வேளையில் மகாதேவனும் ராஜம்மாளும்தான் பிரயாணிகள். அவனே இருவருக்கும் உரிய கட்டணத்தைக் கொடுத்தான்.

நீலம் படிந்து, கண்ணாடி மாதிரித் தெளிவாகவுமிருந்த, குளிர்ந்த நீரோட்டத்தைக் கிழித்துக்கொண்டு, இக்கரையிலிருந்து அக்கரை நோக்கிச் சென்றது. படகு. வெயிலின் சூடு தெரியவில்லை. நீரின் குளுமைதான் பட்டது. அவள் தண்ணீரில் கையிட்டு அளைந்து விளையாடினாள். "என்னம்மா ஜில்னு இருக்குது!" என்று சொல்லி, தன் சொல்லின் உண்மையை உணர்த்த விரும்புகிறவள்போல, கையினால் தண்ணீரை அள்ளி