பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றங்கரை மோகினி 261

அவன் முகத்தில் விசிறி அடித்தாள். தொடர்ந்து சிரிப்பைச் சிந்தினாள்.

அவனுக்குக் கோபம் வந்தது. ஆனாலும் அந்த அழகியிடம் எப்படி எரிந்து விழுவது? யாரோ ஆன ஒரு குறும்புக்காரியிடம் கோபித்து ஏசிப் பேச அவனுக்க மனம் எழவுமில்லை.

சுத்த பைத்தியமாக இருக்கிறியே! இது என்ன விளையாட்டு? என்று அவன் சொன்னான். வறண்ட குரலில் தான் சொன்னான்.

ஆயினும், அவள் முகம் கறுத்தது. அவள் முகத்தை "உம்மென்று" வைத்துக் கொண்டாள். '"நான் ஒண்னும் பைத்தியம் இல்லை. ஆமா... பைத்தியமாம்! இவரு கண்டாரு!... வவ்வவ்வே" என்று முனகி பழிப்புக் காட்டினாள்.

அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால், அவள் சிரிப்பு திடீரென்று போன இடம் தெரியாமல் மறைந்து போய் விட்டது. அவள் பேசவுமில்லை.

கரை வந்ததும், அவள் முதலில் குதித்து வேகமாக நடக்கலானாள். “சரியான சின்னப் பிள்ளைதான். செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட சிறுபிள்ளை!" என்று அவன் எண்ணினான். போனால் போகிறாள்! அவளாக வந்தாள், அவளே போகிறாள். அந்நியளான அவளை அழைக்க அவனுக்கு உரிமை என்ன இருக்கிறது? அவன் அவள் பக்கம் பாராமலே, ஆற்றைப் பார்த்துக் கொண்டு வெறுமனே நின்றான்.

படகு திரும்பிக் கொண்டிருந்தது. பிரயாணிகள் அதிகம் சேரவேண்டும் என்று படகோட்டி காத்திருப்பதில்லை. ஒரு ஆள் ஏறினாலும், ஒரு கரையிலிருந்து மறுகரைக்குப் போவதும், அங்கே இருந்து இங்கே வருவதுமான கடமையை அலுப்புச் சலிப்பு இல்லாமல் செய்யும் இயந்திரமாகி யிருந்தான் அவன்.

அவன் படகு வலித்துச் செல்வதை கவனித்தபடி நின்றான் மகாதேவன்.

திடுதிடுவென ஓடிவந்தாள் ராஜம்மா. “இட்டாசு!” கைகொட்டி ஒசைப்படுத்தி அவன் கவனத்தை இழுத்தாள். "ஏஹே. பயந்து போனிங்களா?... பயந்தே போனார், டோடோய்!” என்று கூவிக் கூத்தடித்தாள்.

அவள் குதிப்பையும் கும்மாளியையும் காணக்கான அவனுக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது.

அவன் சிரிப்போடு அவள் சிரிப்பும் கலந்து கலீரிட்டது.