பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றங்கரை மோகினி 263

உதறி எறிவதுதான் எப்படி? அவன் மனம் வலை பின்னிக்கொண்டேயிருந்தது.

"மறுபடியும் ஆற்றின் கரைக்கே போவோம். மாலை நேரம் அருமையாக இருக்கும்" என்று கூறி அவன் நடந்தான்.

மறுப்புரை கூறாது அவளும் பின் தொடர்ந்தாள். அவள் எதையாவது சொல்லிக்கொண்டு சிரித்து விளையாடியும் பொழுது போக்கினாள். அவன் மீது அவளுக்கு எவ்விதமான பற்றுதலோ, திடீர் பாசமோ ஏற்பட்டு விடவில்லை. அவனுக்கும் அவள்பேரில் அன்போ ஆசையோ பிறந்து விடவும் இல்லை.அவனுக்கு அவள் ஒரு புதிராகவும் புதுமையாகவும் தான் தோன்றினாள்.

"என்னால் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒன்று இருக்கிறது. இவளுள் மறைந்திருக்கும் எதையோ பற்றியது தான். இவள் நல்ல பெண்தான். சுபாவமாகப் பழகுவது போல்தான் தெரிகிறது. இருந்தாலும், இவள் பார்வையில், பேச்சில், செயல்களில் கரந்துறையும் எதுவோ ஒன்று இவளிடம் என்னவோ கோளாறு அல்லது குறைபாடு இருப்பதாகச் சொல்லாமல் சொல்லுகிறது. அதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே" என்று அவன் மனம் வேதனைப்பட்டது.

"அம்மாடி, கால் ரொம்ப வலிக்குதே!" என்று மணலில் தொப்பென விழுந்தாள் அவள். தானாகவே சிரிப்பு வெடித்தது அவளிடமிருந்து.

"அதென்ன சிரிப்போ! பேய்ச் சிரிப்பு!” என்று அலுத்துக் கொண்டது அவன் மனம். உடன் ஒரு எண்ணமும் அலையிட்டது: இவள் பேயாக இருப்பாளோ? மோகினிப் பேயாக? அழகான பெண் வடிவத்தில் பேய் நீர் நிலைகள் பக்கத்தில் நடமாடும், ஆண்களைப் பிடித்துக்கொள்ளும், கூடவே இருந்து கொன்றுவிடும் என்று சொல்வார்களே. அதுமாதிரி ஏதாவது.

இந்த எண்ணமே முட்டாள் தனமாகவும் பைத்தியக்காரத் தனமாகவும் தோன்றியது அவன் அறிவுக்கு.

"பேசாமல் உட்கார்ந்திருக்கிறீர்களே? கதை ஏதாவது சொல்லுங்களேன்!” என்று தூண்டினாள் அவள்.

"கதையா? எனக்குக் கதை சொல்லத் தெரியாதே" என்று கூறினான் அவன்.

"அப்போ நான் சொல்லட்டுமா?" என்று எழுந்து உட்கார்ந்தாள் அவள்.