பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264 வல்லிக்கண்ணன் கதைகள்

"உம்" என்று தலையசைத்தான் மகாதேவன்.

"ஒரு ஊரில் ஒரு ராஜா மகள் இருந்தாள்’’ என்று கதை சொல்லலானாள் அவள். “அவள் அழகுன்னா அழகு சொல்ல முடியாத அழகு. பூரணச் சந்திரன்மாதிரி இருந்த அவளுக்கு சூரியன்மாதிரி மாப்பிள்ளை வரவேண்டும் என்று ராஜாவும் ராணியும் ஆசைப்பட்டாங்க. பல தேசத்து ராஜகுமாரர்களின் படங்களையும் வரவழைத்து மகளிடம் காட்டினார்கள். அந்த ராஜகுமாரிக்கு எந்த இளவரசனையுமே பிடிக்கவில்லை. இவன் மூஞ்சி பனங்காய் மாதிரி இருக்குது, அவன் மூக்கு கொழுக்கட்டை போலிருக்கு, இவன் புறா முட்டைக் கண்ணன் என்று ஒவ்வொருவனையும் பழித்துப் பேசினாள். அதனாலே எல்லா தேசத்து ராஜாக்களுக்கும் இந்த ராஜா பேரிலே கோபம் ஏற்பட்டது. பகை உண்டாச்சு. அவனை ஒழிக்கணுமின்னு திட்டம் போட்டாங்க. இந்த ராஜா என்ன செய்வாரு பாவம். அவருக்கும் மகள் மேலே வெறுப்பு உண்டாயிட்டுது. எவன் கிட்டேயாவது மகளை ஒப்புவித்துவிட வேண்டியதுதான்னு முடிவு செய்து, ஒரு மாப்பிள்ளையைத் தேடிப்பிடிச்சாரு. அவன் ஒரு குட்டி தேசத்து நெட்டை ராஜா. மகள் எவ்வளவு அழுதும் பிரயோசனப்படலே. அந்த ராஜாவுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து; அவனோடு மகளை அனுப்பினாரு. மாப்பிள்ளை ராஜா புது மனைவி பக்கத்திலே ஆசையாக வந்தான். என் நிலாவே, பெளர்ணமியே என்றான். அட அமாவாசையே ஆசையைப் பாரு ஆசையை என்று இளவரசி சிரித்தாள். அவன் அவளைப் பிடிக்க வந்தும் ராஜா மகள் என்ன செய்தாள்? ஏய், தூரப் போ என்று கத்தி, அவன் கழுத்தைப் புடிச்சு அமுக்க ஆரம்பித்தாள். இப்படித்தான் அமுக்கினாள்..."

ராஜம்மா, மகாதேவன் எதிர் பாராத சமயத்தில் அவன் கழுத்தைப் பிடித்து, "ஏய், என்னைத் தொடவா வாறே? ஒடிப்போ...உம். போ... போய்விடு” என்று கோரமாகக் கத்திக் கொண்டு, அமுக்க முயன்றாள்.

ஒரு கணம் அவன் திணிறப் போனான்; எனினும், திமிறிக் கொண்டு, அவள் கைகளில் வேகமாக, பலமாக, அறைமேல் அறை கொடுத்தான். அவள் வேதனை தாங்காது கைகளைக் கீழே தொங்க விட்டாள்.

அவள் முகம் பயங்கரமாகக் காட்சி தந்தது. அவள் கண்கள் வெறி சுடரிட உறுத்து நோக்கின. அவள் அவ்வேளயிைல் பேய் பிடித்தவள்மாதிரி, காளி வேஷக்காரிபோல, தோற்றம் பெற்றிருந்தாள்.