பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266 வல்லிக்கண்ணன் கதைகள்

“இங்கே ஆற்றின் அக்கரையில், கிழக்கே சிறிது தூரத்தில், குணசேகரம் என்றொரு இடம் இருக்கிறது. அங்கே உள்ள கோயில் பிரசித்தமானது. சக்தியுள்ள தெய்வம். பைத்தியக் கோளாறு, பேய்க்குற்றம் முதலியவை அந்த இடத்தில் குணமாகி விடும் என்பது மக்களின் நம்பிக்கை. அங்கேதான் நாங்கள் வந்து தங்கியிருக்கிறோம். நான் முக்கிய விஷயமாக திருச்சி போயிருந்தேன். இவரும் ஒரு இடத்துக்குப் போயிருந்தார். மற்றவங்க கொஞ்சம் கவனக் குறைவாக இருந்துவிட்டாங்க. இவள் யாருக்கும் தெரியாமல் ஓடி வந்திருக்கிறாள். நாங்கள் திரும்பி வந்ததும், இவளைக் காணோம் என்று கேள்விப் பட்டதும், எங்கே போனாளோ என்ன ஆனாளோ என்று பதறியடித்து, தேடித் திரியத் தொடங்கினோம். இங்கே வந்து படகுக்காரனிடம் விசாரித்தோம். ஒரு பெண்ணும், ஒரு ஆணும் அக்கரைக்குப் போனாங்க, அந்தப் பொண்ணு சதா சிரிச்சுக் கிட்டே இருந்தது என்று சொன்னான். எங்களுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. கூட இருந்த ஆளு எப்படி என்று கேட்டபோது நல்ல மனிசனாகத்தான் தோணிச்சு, தப்புத் தவறா நடந்து கொள்கிற ஆசாமியாத் தோணலே என்றான். எங்களுக்கிருந்த பயம் நீங்கிவிட்டது" என்று இன்னொருவர் பேசினார்.

அவர் பெண்ணின் தந்தையாக இருக்கும் என்று மகாதேவன் கருதினான். இயந்திரம் மாதிரித் தனது தொழிலில் ஈடுபட்டிருக்கும் படகுக்காரனிடமும் மனிதரை எடை போடும் குணம் சேர்ந்திருக்கிறது என உணர்ந்து அவன் வியப்புற்றான். அவன் உள்ளம் அந்த மனிதனுக்கு நன்றி கூறியது. நடந்தது முழுவதையும் அவன் அவர்களுக்கு அறிவித்தான்.

ராஜம்மாளின் தந்தை அவனுக்கு வந்தனம் தெரிவித்தார். "நீங்கள் நல்ல பாதுகாப்பாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் இல்லை என்றால், அவள் எங்காவது போய், யாரிடமாவது சிக்கி, கஷ்டப்பட நேரிட்டிருக்கும். அல்லது, ஆற்றில் குதித்து சுழி, சுழல் எதிலாவது சிக்கி உயிரை விட்டிருப்பாள்" என்றார்.

"நீங்களும் எங்களோடு வாருங்களேன். குணசேகரம் கோயிலைத் தரிசிக்கலாம்" என்று ஒருவர் அழைத்தார். "குணசேகரம் வாழ்க. புதுமையான அனுபவம் சித்திக்க வகை செய்த அதை நான் பார்க்கத்தான் வேண்டும். ஆனால், தனியாகச் சென்று காணவேண்டும்" என்று மகாதேவன் நினைத்தான். "இல்லே, இல்லே. நான் திருச்சிக்கு அவசியம் போயாக வேண்டும். முக்கிய அலுவல்கள் இருக்கு" என்று சொன்னான். -