பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிர்ச்சி - 271

கொட்டியது. டிக் - டிக் ஒசை ஒயாது ஒலித்துக் கொண்டிருந்தது.

மீண்டும் அந்தக் கோரமான ஒலி அந்த ஆளின் அடித் தொண்டையிலிருந்து வெளிப்பட்டு, தெளிவு படுத்த முடியாத நீண்ட குரலாகச் சிதறியது. பயம் அதன் அடிநாதமாக இருந்தது.

எல்லாரும் அலறிப்புடைத்து எழுந்தார்கள்.

எல்லா விளக்குகளையும் எரிய விட்டார்கள்.

“என்ன மாமா இது?... உங்க மனசிலே இருக்கிறதைத் தான் சொல்லுங்களேன்... யாராவது பயமுறுத்தினாங்களா மாமா?... எங்காவது எதைக் கண்டாவது பயந்தீங்களா?... அய்யோ, இன்னிக்கு என்ன தான் நடந்தது? ஏன் இப்படி பதறிப் பதறி அலறுறிங்க?..."

அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.

மாமா தனது அமைதியையும் கெடுத்துக் கொண்டு, வீட்டில் உள்ள அனைவரது அமைதியையும் சீர்குலைத்து, என்ன ஏது என்று எதுவும் சொல்லாமல் முரண்டு பிடிப்பதனால் என்ன பிரயோசனம்? அந்தி சந்தியிலே பயந்திருந்தால், பேய் நிசாசு குத்தம் என்று சொன்னால், தகுந்த மந்திரவாதியைப் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கணும். உள்ளுக்குள்ளே ஏதாவது கொணக்கிக்கிட்டு இருந்தது என்றால், டாக்டரைப் பார்த்து நோய்க்கு சிகிச்சை பண்ணனும்...

வீடு கலாமுலாமாயிற்று. ஆள் ஆளுக்கு ஆலோசனைகளை உதறினார்கள்.

"ஒண்ணும் சொல்லாமல் இருந்தால் என்ன தான் அர்த்தம்? பகலிலே என்ன நடந்தது? ராத்திரியிலே இப்படி பதறிப்பதறி அலறும்படியா ஏதோ நடந்துதான் இருக்கணும். சொல்லுங்க, வாய் திறந்து சொல்லுங்க. மனசிலே புதைச்சு வச்சு கஷ்டப் பட்டு, மத்தவங்களையும் கஷ்டப்படுத்தி, இதெல்லாம் எதுக்கு?...”

பேச உரிமை உடையவர்கள் பேசி, தூண்டித் துருவி, துளைத்தெடுத்தார்கள். மனசில் இருப்பதைச் சொல்லி விடுவது நல்லது என்று அவரை உணர வைத்தார்கள்.

திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த அவர் சிறிது சிறிதாகத் தனது அனுபவத்தைச் சொன்னார். அவருக்கு அதிர்ச்சி ஏற்படுத்திய அனுபவம் அது. விபரீதமான பயங்கர அனுபவம் தான்:

அன்று பிற்பகல் ஒன்றரை மணி இருக்கும், வேலை செய்யும் இடத்திலிருந்து அவர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.