பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278 வல்லிக்கண்ணன் கதைகள்

அகன்ற உயர் சூழலில் பெருமாள் பெரிதும் பாதிக்கப் பட்டான்.

எதுவும் செய்யத் திராணியற்ற சிறுபிள்ளையாய்த் திகைத்து விட்ட பெருமாள், இப்போது அழுதான். பொங்கிப் பொங்கி அழுகை எழ, அப்பாவியென அழுதுகொண்டே அவன் நடந்தான்.

இத் தருணத்தில், தனக்குத் தெரிந்த மனிதர் யாரையாவது காண வேண்டும் என்றொரு விசித்திர எண்ணமும் அவன் உள்ளத்தில் நெளிந்தது.

சில சமயம் அதிசயமாக மனிதரின் ஆசை - கனவு அல்லது தீவிர எண்ணம் - நிறைவேறி விடுவதும் உண்டு. பெருமாளுக்கும் அப்படி ஒரு பேறு வாய்க்க வேண்டும் என்றிருந்தது.

பெருமாளின் ஊர்க்காரனான கைலாசம் எதிரே வந்து கொண்டிருந்தான். உயரே இருந்து இறங்கி வரும் ஏதோ உருவமாய்த் தோன்றி, பிறகு அது ஒர் ஆள் எனத் தெரிந்து, அது 'அட, நம்ம கைலாசம்!' என்று பெருமாளுக்குப் புரிவதற்கு, சிறிது நேரம் தேவைப்படத்தான் செய்தது.

அப்பவும் பெருமாளின் அழுகை தொடர்ந்து கொண்டு தானிருந்தது.

கைலாசம் நெருங்கி வந்ததும் வியப்புடன் பெருமாளைப் பார்த்தான். அவனிடம் ஏதோ சரியில்லை என்பது புரிந்தது அவனுக்கு. ‘என்ன பெருமாள்? என்ன விஷயம்?’ என்று கேட்டான்.

பெருமாள் மலையையும் சரிவுகளையும், பக்கத்துப் பள்ளத் தாக்கையும் பார்த்தபடி நின்றானே தவிர, தன் உணர்ச்சிகளை வாய்விட்டுச் சொல்லும் திராணியைப் பெற்றானில்லை.

‘என்னடே, இங்கே எப்படி வந்தே? ஏன் அழுகிறே? என்று பரிவுடன் விசாரித்தான் கைலாசம்.

'ஒண்னுமில்லே! என்று முணுமுணுத்தான் பெருமாள்.

கைலாசம் சிரித்தான். அவன் சந்தோஷமாக இருந்தான். "நாங்க பூசை செய்யவேணும்னு நேற்றே புறப்பட்டு வந்தோமா? மேல் மலையை, நம்பி கோயிலை, அந்தி நேரத்திலே அடைந்து விட்டோம். ராத்திரி அங்கே உள்ள செங்கத்தேறி கட்டடத்திலே தங்கினோம். ஏ பெருமாள்! மலைமீது ராத்திரி வேளையில் தங்கியிருப்பது எவ்வளவு அற்புதமான அனுபவம் தெரியுமா? ஆகா, குளிர், பனிப்படலம். அருமையான நிலா ஒளி. எங்கும் அமைதி. ஆனாலும்