பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278 வல்லிக்கண்ணன் கதைகள்

பெருமித உணர்வு எனக்குள் உண்டாகும். உனக்கு எப்படியோ?” என்று பெருமாள் முகத்தைப் பார்த்தான்.

நான் சாதாரண ஆளப்பா. நீ கவிஞன். கவிதை எழுதாவிட்டாலும், கவிஞனாக வாழ்கிறவன்" என்று பெருமாள் சொன்னான்.

காசுகளை குலுக்கிக் போட்டது போல், கலகலவென்ச் சிரித்தான் கைலாசம்.

('அமுதசுரபி' 1995)


குடியிருப்பில் ஒரு வீடு


நாகரிக நகரங்களில் தவிர்க்க முடியாத வளர்ச்சியாகத் தலையெடுக்கிற எல்லா 'எக்ஸ்டென்ஷன்'களையும் போல் தான் அந்தக் குடியிருப்பும் அமைந்திருந்தது.

அமைதியான சூழ்நிலை, பரபரப்பு இல்லாத அருமையான தெருக்கள், மொட்டைமொழுக்கென்று அழகோ கவர்ச்சியோ இல்லாது கட்டப்பெற்றுள்ள சதுர வடிவக் கட்டிடங்கள் முதலியவற்றை நாகரிக விதிகளின்படி கொண்டிருந்த அந்தப் பகுதிக்கு ஆரம்பத்தில் 'நியூ காலனி' என்று தான் பெயர் சூட்டியிருந்தார்கள்.

காலவேகத்தில், பெயர்களுக்கும் தமிழ் வடிவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று முளைத்த ஒரு உணர்வைப் பின்பற்றி - அந்த வட்டாரத்துக்கும் 'புதுக்குடியிருப்பு’ என்று பெயரிட்டு, பளபளக்கும் தகடுகளில் வார்னிஷ் பெயிண்டில் அழியாத முறையில் எழுதி, அநேக இடங்களில் பதித்து விட்டார்கள்.

இத்தகைய 'மூளை அதிர்வு'களுக்கு யார் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், அவர்களுடைய திடீர் நடவடிக்கைகளின் பிரத்தியட்சப் பிரமாணங்களாகத் திகழும் பெயர்பலகைகள் பல இடங்களிலும் பளிச்சிடுவதை எளிதில் காணலாம்.

‘புதுக்குடியிருப்பு' என்ற அந்த 'நியூ காலனி'யில் மூன்று தெருக்களும் முப்பத்தைந்து வீடுகளும் தான் இருந்தன. முதல் தெரு, இரண்டாம் தெரு, நடுத்தெரு என அழைக்கப்பட்ட வீதிகளில், நடுத்தெரு திடீரென்று முக்கிய கவனிப்புக்கு இலக்காகும் தகுதியைப் பெற்றது.