பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடியிருப்பில் ஒரு வீடு 279

பெரிய நகரங்களில் வீடு கட்டுவதற்கு என்று, தகுதி பெற்றோருக்கு அளிக்கப்படுகிற சலுகைகளையும் பண உதவிகளையும் பிற வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் சொந்த உபயோகத்துக்கு என்று வீடு கட்டியவர்களும், அப்படி கட்டிய வீட்டை 'நல்ல வாடகை கிடைக்கும்’ என்று வேறு யாருக்காவது குடக்கூலிக்கு விட்டு விடுகிறவர்களும் இந்தக் குடியிருப்பிலும் இருந்தார்கள்.

நடுத்தெருவில், வசதி நிறைந்த ஒரு வீடு, ஒருவரின் சொந்த் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டு, அவரால் சிறிது காலம் அனுபவிக்கப்பெற்று, சில மாதங்களாகப் பூட்டியே கிடந்தது. வீட்டுக்காரர் உத்தியோக மாறுதலில் வேறொரு பெரிய நகருக்குப் போய்விட்டதாக 'விஷயம் தெரிந்தவர்கள்' பேசிக் கொண்டார்கள்.

ஒருநாள் - விடிவதற்கு முன்னரே -

'மூன்று மணியிருக்கும்' 'ஒன்றரை மணி' 'இல்லை. நாலு மணிதான்' என்று பல்வேறு அபிப்பிராயங்கள் எழுந்து பரவுவதற்கு உதவிய ஒரு நேரத்தில் -

புதுக்குடியிருப்பு நடுத்தெருவுக்கு ஒரு கார் வந்தது. அந்த வீட்டின் முன் நின்றது. பிறகு போய் விட்டது.

காரில் வந்து இறங்கியவர்கள் யார், எத்தனை பேர். எப்படிப்பட்டவர்கள் என்று எவருக்கும் தெரியாது. ஆனால், அந்த வீட்டுக்கு யாரோ குடி வந்துவிட்டார்கள் என்கிற விஷயம் அவ்வட்டாரத்தின் மூன்று தெருக்களிலும் உள்ள எல்லா வீட்டினருக்கும் தெரிந்து விட்டது.

அந்த வீட்டைக் கட்டியவர் தூக்கத்தின் பக்தரோ, அல்லது லட்சியக் கனவுகள் ஆசைக்கனவுகள் பல வளர்க்கும் உள்ளம் பெற்றிருந்தாரோ - ஏனோ, தெரியவில்லை - தான் கட்டிய வீட்டுக்கு 'ஸ்வப்னா' என்று பெயரிட்டிருந்தார். அந்தப் பெயர் பலரும் பலவிதமாகப் பேசுவதற்கு இடமளித்துக் கொண்டிருந்தது. யாருமே இல்லாது அடைப்பட்டுக் கிடந்த காலத்தில் 'சொப்பனம் தூக்க நிலையில் இருப்பது நியாயம் தானே!’ என்ற தன்மையில் அக்கம் பக்கத்தார் பேசுவது வழக்கம்.

இப்போதும் இஷடம்போல் பேசுவதற்கு 'ஸ்வப்னா' துணை புரிந்தது.

அந்த வீட்டின் முன் கதவு திறக்கப்படாமலே கிடந்தது. சன்னல்களில் குளுமையான மென் வர்ணத் திரைகள் தொங்கின. அடைபட்டுக் கிடந்த வீடு, உயிர்ப்பும் உணர்வும் பெற்றிருப்