பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடியிருப்பில் ஒரு வீடு 283

இரண்டு பெண்களையும் ஏற்றிக்கொண்டு கார் நகர்ந்த பிறகுதான் அவர் படுக்கப்போனார். இந்த நேரத்தில் இவர்கள் எங்கே போகிறார்கள்? ஏன் போகிறார்கள்? ஒன்பது பத்து மணிக்குக் கிளம்பினாலும் சினிமாவுக்குப் போவார்கள் என்று நினைக்கலாம். இந்த வேளை கெட்ட வேளையில், கார் வந்து இவர்களை இட்டுச் செல்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?' என்று அவர் மனம் குறுகுறுத்தது.

'இருட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. இரவு தூங்குவதற்காக ஏற்பட்டது என்பது பொதுவான எண்ணம். ஆனால் நாகரிகப் பெரு நகரங்கள் முழுமையாகத் தூக்கத்தில் ஆழ்ந்து விடுவதில்லை. இரவு வேளைகளில். பாதி நகரம் துயிலில் சிக்கிக் கிடக்கிறபோது, இன்னொரு பாதி விழிப்புடன் என்னென்னவோ செய்து உற்சாகம் பெறுகிறது!’ என்று அவர் எண்ணம் வளர்த்தார்.

அவருடைய சந்தேகங்களை விட தூக்கம் வலியதாகி, அவரை ஆட்கொண்டது.

காலையில் கிருஷ்ணன் விழித்து எழுந்த உடனேயே, சாந்தா புதியதோர் விஷயத்தை அறிந்து கொண்ட உற்சாகத்தோடு, பெருமையோடு, பரபரப்போடு, பேசத் தொடங்கினாள். 'உங்களுக்குத் தெரியாதே! நாலரை மணிக்கு எதிர்த்த வீட்டுக்கு இன்னொரு பெண் வந்திருக்கிறா. சின்ன வயசுதான். அழகாகத் தான் இருக்கிறா. அவளுக்குத் துணையாக வேறொருத்தியும் வந்திருக்கிறா. இரண்டு பேரும் காரில் வந்து இறங்கினாங்க!” எனறாள.

'சின்னக்காரு, இல்லையா? சிறுவயசுப் பெண் நீல நிற ஸில்க் புடவை கட்டியிருந்தாள். என்ன?’ என்று அவர் கேட்கவும், அவள் திகைப்படைந்தாள்.

'நீங்களும் பார்த்தீர்களா? எப்போ?’ என்று, ஏமாற்றம் தொனிக்கும் குரலில், விசாரித்தாள் சாந்தா.

'அவங்க வந்ததை நான் பார்க்கவில்லை. சின்னக் காரு வந்து அந்த ரெண்டு பேரையும் அழைத்துக் கொண்டு போனதைப் பார்த்தேன். அந்த வீட்டில் உள்ளவங்கதான். எங்கோ போய், இராப்பொழுதைக் கழித்துவிட்டு, நாலரை மணிக்கு வீடு திரும்பியிருக்கிறாங்க. அவங்க புறப்பட்டுப் போனபோது இரவு மணி பன்னிரண்டரை' என்று அவர் விளக்கம் தந்தார்.

'பீடைகள்!' என்று கசப்போடு சொன்னாள் சாந்தா. அவள் குரலும் பார்வையும் தெரிவித்த பேசாத பேச்சுக்களில் எவ்வளவோ அர்த்தங்கள் பொதிந்துகிடந்தன.