பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236 வல்லிக்கண்ணன் கதைகள்

இவன் ஆதரவில் தொழில் நடத்திய பெண்களையும் ரவுண்டப் பண்ணி வருகிறோம் என்று அவர் அறிவித்தார்.

கிருஷ்ணன் அவருக்கு வந்தனம் கூறினார். "நாகரிக நகரங்களில் என்னென்னவோ நடைபெறுகின்றன என்று நான் நினைத்தது சரிதான்' என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டார்.

அவர் மூலம் விவரம் தெரிந்துகொண்ட சாந்தா "பாவம், அறியாப் பெண்ணுக என்ன செய்யும்? காண்டாமிருகம் மாதிரி இருந்துகொண்டு, இப்படி எல்லாம் பண்ணுகிறவங்களை சுட்டுக் கொல்லனும். ஆமாம்” என்று சீற்றத்தோடு சொன்னாள்.

புதுக்குடியிருப்பின் மூன்று தெருக்களிலும் உள்ள மற்ற முப்பத்து நான்கு வீடுகளிலும் இந்த விஷயம் தான் பேசப்பட்டது. புதுக் குடியிருப்பு திடீர் கவனிப்புக்கும் பரபரப்புக்கும் இலக்காகும்படி உதவிய 'ஸ்வப்னா' மீண்டும் அடைபட்ட கதவுடனும் பெரிய பூட்டோடும் காட்சி தரலாயிற்று.

('சிவாஜி 1965)


பேரிழப்பு


'இந்த வருஷம் எப்படியும் ஊருக்குப் போய்விட வேண்டியது தான்! இப்படி பூவுலிங்கத்தின் மனம் தீர்மானம் நிறைவேற்றியது.

இவ்வாறு அது தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டது இதுதான் முதல் தடவையோ அல்லது மூன்றாவது தடவையோ அல்ல. முப்பதாயிரத்து ஓராவது தடவையாகவே இருக்கலாம்!

பூவுலிங்கம் பட்டணத்துக்கு வந்து முப்பது வருஷங்கள் ஓடிவிட்டன. அவர் வந்த நாளிலிருந்து 'ஊருக்கு ஒரு தரமாவது போயிட்டு வரணும்' என்கிற ஆசையும் அவரது உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டது. அப்படி முப்பது வருஷ காலமாக அது வளர்ந்து வருகிறது.

வெறும் நினைப்பு, சாதாரண எண்ணம் என்ற நிலை மாறி, ஆசை ஏக்கமாகவும் தவிப்பாகவும், தணித்தாகப்பட வேண்டியதாகவும் பேருருவம் பெற்றுவிட்டது. இன்னும் அது வளர்ந்து வந்தது.

'திருநாளைப்போவார்’ என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த நந்தனாருக்காவது 'நாளைக்குப் போகலாம்... தில்லைக்கு நாளை