பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேரிழப்பு

287

போய்விடலாம்' என்று ஒரு வாயிதா கூறப்பட்டு வந்தது. அவரும் அதில் நிச்சய நம்பிக்கை வைத்திருந்தார்.

பூவுலிங்கத்துக்கு அந்த விதமான நம்பிக்கைக்கே இடம் இருந்ததில்லை. அவரும் முப்பது வருஷ காலமாக, செயல் படுத்தப்படாத - செயல்படுவதற்கு வாய்ப்பு நிச்சயம் கிட்டும் என்ற நம்பிக்கைகூடப் பெறமுடியாத - அந்த எண்ணத்தை ஏக்கமாக வளர்த்து வந்தார். 'இந்த வருஷம் எப்படியாவது ஊருக்குப்போய்விட வேண்டியதுதான். முப்பது வருஷத்துக்கு முந்திப் பார்த்தது. கோயிலும், பிள்ளையார் நந்தவனமும், தெப்பக்குளமும், அரசமரமும், ஆறும் அப்படியே கண்ணுக்குள் நிற்கின்றன. அவற்றை எல்லாம் திரும்பப் பார்க்க வேண்டும். அப்போது சின்னப்பயல்களாகத் திரிந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவேணும்!' இந்த விதமாக அவர் எண்ணாத நாள் கிடையாது.

பூவுலிங்கம் வெறும் பூவு ஆக, 'எலேய் பூவு' 'அடேய் பூவுப்பயலே!' என்று அதட்டுவோர் குரலுக்கு அஞ்சி ஒடுங்கிப் பணிவுடன் அருகே வரும் சின்னப் பயலாகத் திரிந்து கொண்டிருந்த காலத்திலேயே, ஒரு பெரிய மனிதர் பெரிய மனசு பண்ணி அவனை பட்டணத்துக்கு அழைத்துவந்து விட்டார். அவர் வீட்டில் எடுபிடி வேலைகள் செய்துகொண்டு, போட்டதைத் தின்று, பிள்ளைகளை எடுத்து வைத்து, 'ஏய்!” என்று கூப்பிடும் குரலுக்கெல்லாம் 'என்ன ஐயா!' எனக் கேட்டு பணிவிடை செய்து, இரவு பகலாக வீட்டில் நாய் மாதிரி காத்துக் கிடப்பதற்காகத் தான் ஊரின் பெரிய வீட்டுப் பெரிய ஐயா அந்தப் பயலைத் தம்முடன் அழைத்து வந்தார்.

பூவுப்பயலின் அப்பன்காரனும் ஆத்தாக்காரியும் "எசமான், இந்தப் பயல் இங்கே இருந்தால் வீணாக் கெட்டுச் சீரழிஞ்சு போவான். அவனை உங்களோடு கூட்டிக்கிட்டுப்போயி ஆளாக்கி விடுங்க!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதனாலேதான், சிறுகுளம் முதலாளி மகன் கைலாசம் பிள்ளை அவனை பட்டணத்துக்கு அழைத்து வந்தார். அப்போது அவனுக்குப் பத்து வயது.

சிறுகுளம் என்பது 'சுத்தப் பட்டிக்காடு'. பள்ளிக் கூடம் என்ற பேருக்கு திண்ணையில் ஒரு அண்ணாவி சில பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அச்சிலரில் ஒருவன் ஆக விளங்கும் பேறு பூவுப் பயலுக்குக் கிடைத்ததில்லை.

அவன் தந்தை பல்வேசம் பெரிய வீட்டில் வண்டிக்காரனாக வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். 'பயல்