பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292 வல்லிக்கண்ணன் கதைகள்

வெள்ளைக்காரன் காலத்துப் பட்டணத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் புது வருஷப் பிறப்பும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. டிசம்பர் ஜனவரி மாதங்களில் இந்நகரம் புதுப் பொலிவும் தனி மிடுக்கும், களி வெறியும் குதுகலமும் கும்மாளியும் பெற்று விளங்கியதை அவர் பார்த்தார்.

யுத்த காலத்தில் நகரமே காலியாகி விட்டது போல், ரொம்பப்பேர் இங்கிருந்து ஒடிப்போனதையும், பட்டணம் இருள் பிரதேசமாய், பயம் மிகுந்த இடமாய், பட்டாளத்துக்காரர்கள் நடை போடும் சூழலாய் மாறியதையும் அவர் கண்டார். விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளையும், சுதந்திரம் பெற்ற பிறகு தோன்றிய மாறுதல்களையும் அவர் கவனித்தார்.

ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியும் பளிச்சென்றோ, மறைமுகமாகவோ தனது பாதிப்புகளை இந்நகர்மீது அழுத்திச் சென்றதை அவர் உணர்ந்தார்.

காலம் நிகழ்த்திய மாற்றங்கள்தான் எத்தனை எத்தனை!

முக்கிய ரஸ்தாக்களில் ஙணஙண ஒலி எழுப்பியவாறே ஒடிக்கொண்டிருந்த டிராம் வண்டிகள் இல்லாதொழிந்தன. பஸ்கள், மோட்டார்கள், சைக்கிள்களின் போக்குவரத்து அதிகரித்துக்கொண்டே போயின. யுத்த காலத்தில் ஜன நெருக்கடி குறைந்திருந்த நிலை மாறி, ஜனப் பெருக்கமும் நெருக்கடியும் அளவில் அதிகரித்து வந்தது.

அழகான சூழ்நிலைகள் பல சிதைவுற்றன. பெரிது பெரிதாக வளர்ந்து நின்ற மரங்கள் பல வெட்டப்பட்டு, குளுமையோடு இருந்த இடங்கள் வெறிச்சோடி விளங்கின. கட்டிடங்கள் புதுசு புதுசாக எழுந்தன. நாகரிக மோஸ்தரில் கட்டிட உருவங்களும் அமைப்புகளும் மாறி விசித்திரக் காட்சிகளாக மொட்டை மொழுக்கென்று கண்களை உறுத்தலாயின.

எப்படியோ, பல வகைகளிலும் பட்டணத்தின் வெளித் தோற்றம் பெரும் மாற்றங்களைப் பெற்றுக் கொண்டிருந்தது. எங்கெங்கு நோக்கினும் ஏகப்பட்ட கடைகள். பிரகாசம் மிகுந்த வெளிச்சம். ஜனக்கூட்டம். பளபளப்பு, பகட்டு, வர்ணக் கலவைகள்...

இவற்றை எல்லாம் காணக் காண, பூவுலிங்கத்தின் மனம் சிறுகுளம் என்கிற ஊரைப்பற்றியே எண்ணியது. அந்த ஊரும், வேகமாக இல்லாது போயினும், சிறிது சிறிதாகவேனும் மாறுதல்களை ஏற்று, வளர்ந்திருக்கும். காலத்தின் கைவண்ணம் அச்சிற்றூருக்கும் அதிகச் சோபை சேர்த்திருக்கும் என்று அவர் நினைத்தார்.

ஊர்கள் தோறும் மின்சார விளக்குகள் பரவியதையும், ரேடியோ புகுந்துவிட்டதையும், பஸ் போக்குவரத்து மூலைக்கு மூலை ஏற்பட்டிருப்பதையும் பத்திரிகைச் செய்திகளாகவும், பிரயாணம் போய் வருவோரின் பேச்சுகள் மூலமும் கேட்டறிந்த