பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294 வல்லிக்கண்ணன் கதைகள்

தொழிற்கூடங்களின் தன்மையும் அவரின் ஊர் பற்றிய கற்பனை நிலைக்கு உரமிட்டன.

பட்டணத்திலிருந்து நானுற்றுமுப்பது மைல்கள் கடந்துதான் அவருடைய ஊர் இருந்தது. முந்நூறு மைல்கள்வரை காடும் செடியும், பசுமையும் பயிருமாக வளத்தின் பொலிவோடு காட்சி தந்த சூழ்நிலை பிறகு வறண்ட பிரதேசமாய் பார்வையில் படலாயிற்று. மழை இல்லவே இல்லை; அதனால் வறட்சி படுமோசமாக இருந்தது. ஆங்காங்கு வந்து சேர்ந்த மக்களும், கண்ணில் தென்பட்டவர்களும், உவகை எழுப்பும் உருவ மினுக்கு உடையவர்களாக இல்லை.

நானுாறாவது மைலில் உள்ள முக்கிய ஜங்ஷனில் ரயிலை விட்டு இறங்கிய பூவுலிங்கம் பட்டணத்தின் மிகச் சிறு அளவேயான ஒரு குட்டிப் பகுதியைப் பார்ப்பது போலவே உணர்ந்தார். கும்பலும், வேலையில்லாமல் சுற்றி அலைவோரும். பஸ்களும், போக்குவரத்து நெரிசலும் இந்த விதமான பிரமையைத் தந்தன அவருக்கு.

பஸ் நிற்கும் இடத்திலும், பஸ்களிலும் கட்டத்துக்குக் குறைவு இல்லைதான். எப்படியோ பஸ் பிடித்து, முப்பது மைல் பிரயாணம் செய்து, 'நகரமும் இல்லாத பட்டிக்காடும் அல்லாத' இரண்டும் கெட்டான் ஊர் ஒன்றில் இறங்கி மூன்று மணி நேரம் காத்துக்கிடந்து, வேறொரு பஸ் வந்த பிறகு ஏறி, சிறுகுளம் என்கிற 'லட்சியக் கனவு’ ஊரை எட்டிப்பிடித்தார் பூவுலிங்கம்.

பிரயாணம் செய்யச் செய்ய வறட்சியும், வறுமையின் சின்னங்களும், மனித உருவங்களின் விகாரத் தோற்றங்களும், பணக் கஷ்டத்தின் கோரப் பிரதி பலிப்புகளும் பளிச்செனப்பட்டன.இருப்பினும், தனது எண்ணத்திலும் கனவிலும் நிலையாய் கண்டு மகிழ்ந்த சிறுகுளம் இனிமை மிகுந்த குளுகுளு ஊராகவே இருக்கும் என்றுதான் பூவுலிங்கத்தின் மனம் நினைத்தது.

பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கியதுமே, அவர் மனச் சித்திரத்தில் பெரும் வெடிப்பு ஏற்பட்டுவிட்டது. அவர் தெருத் தெருவாக நடக்கத் தொடங்கியதும், அவருடைய உள்ளத்திலே நித்திய செளந்தர்யத்தோடு நிலை பெற்றிருந்த இளம் பருவச் சூழ்நிலை பற்றிய ரம்மியமான சித்திரம் தகர்ந்து, உருக் குலைந்து விழுந்து, சிதறிச் சின்னாபின்னமாகிப் பாழ்பட்டு மக்கியது.

பூவுலிங்கத்தின் உள்ளத்தில் சிரஞ்சீவித் தன்மையோடு இனிமையாய், எழிலாய் பசுமையாய், வளமாய், அருமையாய், ஆனந்த உறைவிடமாய் கொலுவிருந்த சிறுகுளத்துக்கும், கண முன்னே காட்சி அளித்த ஊருக்கும் எவ்வளவுக்கு எவ்வளவு