பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேரிழப்பு 295

வித்தியாசம்!

தெருக்கள் குறுகி, புழுதிமயமாய், அழுக்கும் அசிங்கமுமாய் கண்களை உறுத்தின. ஒவ்வொரு தெருவிலும் அநேக வீடுகள் இடிந்து விழுந்து, குட்டிச் சுவரும் கட்டை மண்ணுமாய் காட்சி தந்தன. வீடு என்ற பெயரோடு தலைதுாக்கி நின்ற பல குடிசைகள் 'இப்பவோ பின்னையோ இன்னும் சித்தெ நேரத்திலோ' விழுந்துவிடுவோம் என்று எச்சரிக்கை கொடுத்தவாறு உயிரைப் பிடித்துக்கொண்டு நின்றன. அநேக வீடுகளில், ஆட்கள் பிழைப்புக்கு வழிகாண நகரங்களைத் தேடிச் சென்றுவிட்டதால், பூட்டுகள் தொங்கின; கறையான் தன் வேலையை வெகு தீவிரமாகச் செய்து கொண்டிருந்தது.

ஊர் ஒரத்தில் முன்பு பூவரச மரங்களும் நந்தவனமுமாக அழகுடன் காட்சி தந்த தனித் தெரு இப்போது அடர்த்தியான குட்டை முட்செடி இன 'நீர்க் கருவேல்' புதர் புதராக மண்டிக் கிடக்கும் பாழ்பட்ட பகுதியாக விளங்கியது. கோயில்கள்கூட வசீகரம் குன்றியே காணப்பட்டன. ஊரின் எல்லையில் திடுமென ஓசை எழச் சிறு அருவிகள் விழும் மதகுகளோடு இருந்த பாலம் இப்போது பலமான சுவரமைப்புகளோடு, இறுக மூடிய பலகைகளோடு, புதுமைத் தோற்றம் பெற்றிருந்தது. மொத்தத்தில் ஊரே பலரகமான பொருள்களும் தாறுமாறாகக் குவிந்து கிடக்கும் குப்பைமேடு மாதிரித் தோற்றம் காட்டியது.

அங்கு வசித்த ஆட்களில் அவருக்குத் தெரிந்த அவரை இனம் கண்டுகொள்ளக் கூடிய - நபர் யாருமே இல்லை. பலரும் ஏதோ சாயைகள் போலும், அருவங்கள் போலும், எலும்பு உருவங்கள் போலும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். உணர்ச்சித் துடிப்பு, உயிரோட்டம், உவகைத் துள்ளல், திருப்தி முதலியன பெற்ற மனிதர்களாகக் காணப்படவில்லை அவர்கள். வாழ்க்கை எனும் கொடிய இயந்திரம் கசக்கிப் பிழிந்து விட்ட சக்கைகளாய், சாரமற்ற முறையில் நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கும் நிழல்களாய் திரிந்தார்கள். வாழ்க்கையே கோரமான தண்டனை ஆகிவிட, மரணம் எனும் விடுதலையை அடைவதற்காகக் காத்திருக்கும் குற்றவாளிகள் போல், மண்ணைப் பார்த்தபடி தலை குனிந்து நடந்த உருவங்களையே அவர் கண்டார். -

இரவு வந்ததும், மின்சார விளக்குகள் எரித்தன. வெறுமையை, வறுமையை, பாழ்பட்ட சூழலை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கே அவை உதவின. ஏழரை மணிக்கே ஊர் அடங்கிவிட்டது. எட்டரை மணிக்கெல்லாம் விளக்குகள் அணைக்கப்பட்டு, ஊரே சுடுகாட்டு அமைதி பெற்ற இடமாக இருளில் மூழ்கி விட்டது.