பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 வல்லிக்கண்ணன் கதைகள்

ஒட்டல் சமீபமாக அடி எடுத்து வைக்கவில்லை, அவனோடு போகும் சமயங்களில்,

நம்பிராஜன் பேச்சும், அவளைப் புகழ்ந்து அவன் எழுதும் வரிகளும் அவளது செவிகளுக்கும் மனசுக்கும் மிகுதியும் இனித்தன. அவற்றை அவள் வரவேற்றாள்.

அவள் பெயர் சித்ரா என அறிந்ததும் அவன் உற்சாகத்தோடு பல வரிகள் எழுதினான். -

சித்திரை, வசந்தத்தின் பண்ணை. அழகிய காலம், என் வசந்தம், இனிமையின் கொலு, அருமைச் சித்ரா. எனது வாழ்வில் பசுமை புகுத்த வசந்தம் என வந்தவளே! உனக்குப் பெயர் சித்ரா! ஆகா, என்ன அழகான, அருமையான பெயர்! நீ அழகுகளின் கொலுமண்டபம். அன்பின் உறைவிடம்...'

இந்த ரீதியில் அடுக்கியிருந்தான். அவளுக்கு ஆனந்தம் அளித்தது அது.

நாட்கள் ஜோராக ஓடின. திடீரென்று ஒரு நாள் நம்பிராஜனுக்கு ஒரு வியாதி வந்தது. பலக்குறைவு. போதிய போஷாக்கு இல்லை; வீணான அலைச்சல், மனக்கவலை இப்படி எத்தனையோ காரணங்கள். வியாதி வருவதற்குக் கேட்பானேன்?

வந்த வியாதி லேசில் போகவில்லை. அவன் தர்ம ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். நல்ல கவனிப்பு கிடைத்தது. மூன்று மாத காலம் அங்கேயே தங்கியிருக்க நேர்ந்தது.

சிறிது குணமான உடனேயே அவன் சித்ராவைப் பற்றி எண்ணுவதைத் தொடர்ந்தான். அவனது எண்ணமாய், ஏக்கமாய், ஆசையாய், கனவாய், காதலாய் உருப் பெற்றிருந்தாள் அவள். அவளுக்குக் கடிதங்கள் எழுதினான். நோட்டில் அவளைப் பற்றி எழுதிக் கொண்டே இருந்தான்.

அவள் கடைசிநாள் வரை வரவே இல்லை. அவளுக்கு ஏதேனும் அலுவல் அல்லது அசெளகரியம் ஏற்பட்டிருக்கும் என்று அவன் எண்ணிக்கொண்டான்.

நம்பிராஜன் சித்ராவைக் காணச் செல்வதில் கால தாமதம் செய்யவில்லை. அவன் போனபோது அவள் வீட்டில் இல்லை.

சித்ராவின் தாய் அவனை வெறுப்புடன் நோக்கினாள், 'இத்தனை நாளாக இல்லாமல் இப்போ நீ எங்கிருந்து வந்தே? எனறு அவன முகத்தில் அறைந்த மாதிரி கேட்டாள். தனக்கு வந்த வியாதியின் கொடுமை பற்றி அவன் சொன்ன பிறகு கூட அவள் அனுதாபம் கொண்டதாகத் தெரியவில்லை.